மேலும்

சிறிலங்காவில் எமது விருப்பத்துக்கு மாறாக நாம் ஆளப்படுகிறோம் – சம்பந்தன்

இன்று இந்த நாட்டில் எமது விருப்பத்துக்கு மாறாக நாம் ஆளப்படுகிறோம் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,  ஐ.நாவின் முன்னாள் அரசியல் விவகாரச் செயலர் ஜெப்ரி பெல்ட்மனிடம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின், முன்னாள் அரசியல் விவகாரச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கொழும்பில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின்போதுகடந்த ஆண்டு ஒக்ரோபர் 26  சம்பவங்களின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பும், அதன் தலைவரும் செயற்பட்ட விதம் குறித்து ஜெப்ரி பெல்ட்மன் பாராட்டுதெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன், “ தமிழ் மக்கள் எப்போதும் அரசியலமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தவர்கள் என்றும் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக செயற்படாமல் கொள்கைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றியவர்கள்.

அரசியலமைப்பு சபை உயர் பதவிகளுக்கு நபர்களை நியமிக்கின்ற போது மிகவும் அவதானத்துடன் செய்யப்பட்டமையானது, அரசியலமைப்புக்கு முரணான சம்பவங்களை இந்த நாட்டின் உயர் நீதிமன்றங்கள் அனுமதிக்காமைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

காணாமல் போனோருக்கான பணியகம், இழப்பீட்டு பணியகம் மற்றும் உண்மை நல்லிணக்க ஆணைக்குழு போன்றவை மக்கள் மத்தியில் செயற்படுவது அவசியம்.

அத்தகைய பணியகங்கள் உண்மையை நிலைநாட்டுவதற்கு தொடர்ச்சியாக மக்களோடு இணைந்து செயற்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைப்பது மாத்திரமல்லாது அரசாங்கமும் ஏனைய மக்களும் தங்களை குறித்து கரிசனையாக உள்ளார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளும் முகமாக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

அரசாங்கமும் சில அரசியல்வாதிகளும் இதனை தமிழ் -சிங்கள பிரச்சினையாக உருவாக்க முயற்சிக்கின்றனர். இது அத்தகைய பிரச்சினை அல்ல. மாறாக இது அடிப்படை மனித உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்.

அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திற்கு பிற்பாடு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த விடயம் தொடர்பில் அநேக கருமங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.

ஆனால் அரசியல் விருப்பும் உத்வேகமும் இல்லாமையும் அரசியல் ரீதியாக இருக்கின்ற செல்வாக்கினை இழந்து விடுவோம் என்ற பயமும் அரசியல்வாதிகள் மத்தியில் காணப்படுகின்றன.

தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை தீர்ப்பது தலைவர்களின் கடமை. அரசியல் விருப்பம் இல்லாமையானது சுதந்திரத்திற்குப் பின்னர் இந்த நாடு முன்னேற்றகரமான பாதையில் செல்வதற்கு தடையாக உள்ளது.

தமிழ் மக்கள் தாம் எப்போதும் ஏமாற்றப்படுவதாகவே உணர்கிறார்கள். சரியானதை செய்வது தொடர்பில் சிங்கள தலைவர்கள் பின்வாங்குகிறார்கள்.

பிரிக்க முடியாத, பிரிபடாத ஒருமித்த நாட்டிற்குள் நியாயமான ஒரு அரசியல் தீர்வினையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழ் மக்கள் தமது சொந்த வரலாற்றையும் பாரம்பரியங்களையும் கொண்ட தனித்துவமான மக்கள். நாங்கள் கேட்பது எமது அடிப்படை உரிமைகளையே.

இன்று இந்த நாட்டில் எமது விருப்பத்திற்கு மாறாக நாம் ஆளப்படுகிறோம்.

சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக சிறிலங்கா தொடர்பான பிரச்சினையை அனைத்துலக மட்டத்தில் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *