மேலும்

இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்

இலங்கையின் கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் சூறையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றமையினால், அவற்றினைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அப்பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.

சங்கமன் கண்டி பிரதேசத்தின் பிரதான வீதியிலிருந்து மேற்குப் புறமாக சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில், ஏராளமான புராதன சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில சின்னங்கள் கிறிஸ்துவுக்கு முன்னர் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், சில சின்னங்கள் கிறிஸ்துவுக்குப் பின்னர் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை எனவும் அறியப்படுகின்றன.

வரலாற்றுத்துறை பேராசிரியரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வேந்தருமான எஸ். பத்தமநாதன், இந்த தொல்லியல் சின்னங்கள் மேற்குறிப்பிட்ட காலங்களுக்குரியவைதான் என்பதை, பிபிசிக்கு உறுதிப்படுத்தினார்.

மலைகளிலும் மலைகள் அருகே காணப்படுகின்ற இந்தப் புராதன சின்னங்கள், இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், அவற்றினை பாதுகாப்பதற்கான போதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என, அந்தப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

குறித்த பகுதியில் அடிக்கடி சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமையினால், அங்கு காணப்படும் பெறுமதிமிக்க புராதன சின்னங்கள் சேதமடைந்தும், அழிவடைந்தும் செல்கின்றன என்று, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த கே. தர்மராஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இப்பகுதியில் கல்வெட்டுக்கள், நடுகல், கல்லறைகள், பாறைத்தூண்கள், மலைகளில் குடையப்பட்ட நேர்த்தியான குழிகள் மற்றும் நீர்த் தொட்டிகள் உள்ளிட்ட ஏராளமான புராதன சின்னங்களை இன்னும் காணக் கிடைக்கின்றன.

இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்படும் ‘நடுகல்’ இங்கு காணப்படுகின்றமையினை பேராசியர் பத்மநாதன் உறுதிப்படுத்தியுள்ளதோடு, ‘நடுகல்’ என்பது, ஆதி இரும்புக்காலம் என்று சொல்லப்படுகின்ற – பெருங்கல் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாகும் எனவும் கூறியுள்ளார்.

பெருங்கற்கால மக்கள்தான் ‘நாகர்’கள் என அழைக்கப்படுவதாகவும் பேராசிரியர் பத்தமநாதன் தெரிவித்தார்.

அந்த வகையில் ‘நடுகல்’ இங்கு காணப்படுகின்றமையினை வைத்து, கிறிஸ்துவுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் இங்கு பரவியிருந்தார்கள் என்பதை திடமாகக் கூறலாம் எனவும் பேராசிரியர் பத்மநாதன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், அங்கே கிடைக்கப்பெற்ற பானையோடு ஒன்றில் தமிழ் பிராமி எழுத்து காணப்பட்டதாகவும், இதனை தென்னிந்திய ஆய்வாளர்களும் அக்காலத்தில் உறுதி செய்தனர் என்றும் பேராசிரியர் பத்மநாதன் சில வருடங்களுக்கு முன்னர் கூறியிருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது.

“ஈமத்தலங்களில் அமைக்கப்பட்ட நான்குக்கும் மேற்பட்ட கல்லறைகள் இப்பகுதியில் காணப்படுகின்றன. இவை நீள் சதுரமான வடிவுடையவையாகும். அந்த கல்லறையை நீளமான ஒரு கல்லினைக் கொண்டு மூடி விடுவார்கள். அதனை தொப்பிக் கல் (Dollmen) என்று சொல்வார்கள். இந்த ‘தொப்பிக்கல்’கள் இங்கு காணப்படுவதை வைத்தும், கிறிஸ்துவுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கு தமிழ் மொழிபேசிய மக்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்த முடியும்” எனவும் பேராசிரியர் பத்தமநாதன் தெரிவித்திருந்தார்.

பெருங்கற்கால மக்கள் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தார்கள் என்றும், அவர்கள்தான் தமிழ் மொழியை இலங்கைக்குக் கொண்டுவந்தனர் என்றும் பேராசிரியர் பத்மநாதன் சுட்டிக்காட்டினார்.

கிடைக்கப்பெற்ற தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், கி.முன்னர் 04 நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான், தமிழ் – எழுத்து வடிவம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த வகையில், ஆதி இரும்புக்காலம் என்று சொல்லப்படுகின்ற – பெருங்கற்காலத்தில் தமிழ் பேசிய மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்களும், தமிழ் பிராமி எழுத்துக்களும் கிடைக்கப் பெற்றுள்ள இடத்தையும், அங்கு காணப்படுகின்ற தொல்லியல் சின்னங்களையும் பாதுகாக்க வேண்டியமை அரசின் கடமையாகும்.

அனுராதபுரம் மற்றும் பொலநறுவை போன்ற இடங்களிலுள்ள தொல்லியல் சின்னங்களை அரசு பாதுகாத்து வருகின்றமை போல், சங்கமன் கண்டி பிரதேசத்திலுள்ள தொல்லியல் சின்னங்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நன்றி – பிபிசி தமிழ்

ஒரு கருத்து “இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்”

  1. Nakkeeran says:

    இலங்கைத் தொல்பொருள் திணைக்களம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தமிழுக்கும் ஒரு பிரிவு உருவாக்கப்பட வேண்டும். இது ஒன்று தமிழர்களது தொல்லியல் வரலாற்றை
    பாதுகாக்க ஒரு வழி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *