மேலும்

போயிங் 737-8 மக்ஸ் விமானங்கள் சிறிலங்கா வானில் பறக்கிறதா ?

சிறிலங்கா வான்பரப்பில், போயிங் 737-8 மக்ஸ் விமானங்கள் தற்போது பறப்பதில்லை என்று, சிறிலங்காவின் சிவில் விமான போக்குவரத்து  பணிப்பாளர் நாயகம் நிமலசிறி தெரிவித்துள்ளார்.

எதியோப்பியாவில் போயிங் 737-8 மக்ஸ் விமானம் ஒன்று, 157 பேருடன் விழுந்து நொருங்கியதை அடுத்து, இந்த வகை விமானங்களின் தொழில்நுட்ப ரீதியான பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம், இதே ரக விமானம் ஒன்று இந்தோனேசியாவிலும் விபத்துக்குள்ளாகியிருந்தது.

இதனால், போயிங் 737-8 மக்ஸ் விமானங்களின் தொழில்நுட்பத் தகைமை குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த விமானங்களைத் தடை செய்துள்ளார்.

இந்த நிலையில், எதியோப்பியாவில் விபத்துக்குள்ளானதை அடுத்து. போயிங் 737-8 மக்ஸ் விமானங்களின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் குறித்து சிறிலங்கா அவதானித்து வருவதாக சிவில் விமான போக்குவரத்து  பணிப்பாளர் நாயகம் நிமலசிறி தெரிவித்துள்ளார்.

“இப்போது, சிறிலங்கா வான்பரப்பில், போயிங் 737-8 மக்ஸ் விமானங்கள் பறப்பதில்லை. சிறிலங்காவில் தரையிறங்குவதும் இல்லை.

உள்நாட்டு விமான சேவை,  போயிங் 737-8 மக்ஸ் விமானங்களைப் பயன்படுத்துவதில்லை.

கட்டுநாயக்க  விமான நிலையத்துக்கு, சேவைகளை நடத்தும், இந்த விமானங்களைப் பயன்படுத்துகின்ற ஆறு நிறுவனங்கள், இந்த விமானங்களை சேவையில் இருந்து நிறுத்தி வைத்திருக்கின்றன.

போயிங் 737-8 மக்ஸ் விமானங்களை வானில் பறக்க இந்தியா தடைவிதித்துள்ளது. இந்த தடை சிறிலங்காவுக்குள் இந்த வகை விமானங்கள் நுழைவதை காத்திரமான முறையில் தடை செய்கிறது.

நிலைமைகளை சிறிலங்கா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியான பின்னர் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *