வாக்கெடுப்பை நடத்த விடாமல் மைத்திரியைக் காப்பாற்றிய ரணில்
சிறிலங்கா அதிபருக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டைத் தோற்கடிக்கப் போவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் எச்சரித்திருந்த போதும், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே அந்த நிதி ஒதுக்கீட்டுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
வரவுசெலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பின் மீது, நேற்று குழுநிலை விவாதங்கள் நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகின. சிறிலங்கா அதிபருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட ஒதுக்கீடுகள் குறித்த விவாதம் இடம்பெற்றது.
நேற்றுக்காலை 10.30 மணிக்குத் தொடங்கிய விவாதத்தில், உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள், சிறிலங்கா அதிபரை விமர்சித்து காட்டமான உரைகளை நிகழ்த்தினர்.
இந்த விவாதங்களின் முடிவில், சிறிலங்கா அதிபருக்கான ஒதுக்கீடுகள் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய கேள்வி எழுப்பிய போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்லவும், வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியதில்லை என்று அறிவித்தனர்.
எனினும் ஐதேக உறுப்பினர் சமிந்த விஜயசிறி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
அவரது எதிர்ப்பை பதிவு செய்து கொண்டு, வாக்கெடுப்பு நடத்தப்படாமல், சிறிலங்கா அதிபருக்கான நிதி ஒதுக்கீடுகள் அங்கீகரிக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
இந்த நிலையில், ஐதேகவின் பின்வரிசை உறுப்பினர்களான, ஹிருணிகா பிறேமச்சந்திர, முஜிபுர் ரஹ்மான், சமிந்த விஜேசிறி, றோகிணி குமாரி விஜேரத்ன, ஹேஷா விதானகே ஆகியோர் சபையை விட்டு வெளியேறினர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஜேவிபி உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை