மேலும்

வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு

இரணைமடு குளத்தில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்துவதற்கான செயற்திட்டத்துக்கான முன்மொழிவு ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு, வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுனராக அண்மையில் நியமிக்கப்பட்ட சுரேன் ராகவன் நேற்று இரணைமடுவுக்கு கண்காணிப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

ஆளுனராகப் பதவியேற்ற பின்னர் இரணைமடுவுக்கு அவர் மேற்கொண்ட இரண்டாவது பயணம் இதுவாகும்.

முதல் பயணத்தின் போது, கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயவே நேற்று அவர் அங்கு சென்றிருந்தார்.

இதன்போது, இரணைமடுவில் தேக்கப்படும் நீரில், 40 வீதம் மாத்திரமே விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், ஏனைய 60 வீதமான நீர் வீணாக கடலில் சேர்வதாகவும், வட மாகாண நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர். சுதாகரன் எடுத்துக் கூறினார்.

இதையடுத்தே, வீணாக கடலில் சேரும் நீரை யாழ்ப்பாணத்தின் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்துவது தொடர்பான திட்ட முன்மொழிவு ஒன்றை சமர்ப்பிக்குமாறும், அதனை சிறிலங்கா அதிபரிடம் சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஒரு கருத்து “வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு”

  1. Thanga says:

    இரணைமடுக் குளத்தில் இருந்து 60 விழுக்காடுத் தண்ணீர் வீணாகக் கடலுக்குள் போய்ச் சேருகிறது என்ற செய்தி அதிர்ச்சியான செய்தி. இரணைமடுக் குளத்து உபரி தண்ணீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தபோது நா.உ. சிறிதரன் அதற்கு எதிராக கமக்காரர்களை திரட்டி போராடிபானார். இம்முறை என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *