மேலும்

புதூர் ஆயுதப் பொதி  – பிரதான சந்தேக நபர் இந்தியாவுக்குத் தப்பினார்

வவுனியா, புளியங்குளம் பகுதியில் உள்ள புதூரில், கைத்துப்பாக்கி, கைக்குண்டுகளைக் கொண்ட பொதியை வீசி விட்டுத் தப்பிச் சென்ற நபர் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் மூலம், பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து கிடைத்த தகவல்களை அடுத்து, ரி 56 ரகத் துப்பாக்கி ஒன்றும், மூன்று மோட்டார் குண்டுகளும் கைப்பற்றப்பட்டதாக சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதூரில் சிறிலங்கா காவல்துறையினரைக் கண்டதும், நபர் ஒருவர் தனது கையில் இருந்த பொதியை வீசி விட்டுத் தப்பிச் சென்றிருந்தார்.

இதையடுத்து, சிறிலங்கா காவல்துறையினரும், இராணுவத்தினரும் இணைந்து பாரிய தேடுதலில் ஈடுபட்டனர். எனினும், எவரும் கைது செய்யப்படவில்லை.

பொதியில் இருந்து மீட்கப்பட்ட அலைபேசிகள் உள்ளிட்ட தடயப்பொருட்களை வைத்து நடத்திய தொடர் விசாரணைகளை அடுத்து, பெண் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் கைது செய்யப்பட்டதை அடுத்து, ரி 56 ரகத் துப்பாக்கி ஒன்றும், மூன்று மோட்டார் குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

எனினும்,  அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீசி விட்டுச் சென்ற பை ஒன்றையை தான் எடுத்து வைத்திருந்ததாகவும்,  அதற்குள் என்ன இருந்தன என்பது தனக்குத் தெரியாது என்றும் அந்தப் பெண் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஆயுதப் பொதி வீசப்பட்ட சம்பவத்துடன் 12 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆயுதப் பொதியை வீசி விட்டுச் சென்றவர், இவர்களைக் கையாளுபவர் உள்ளிட்ட 9 பேர் இன்னமும் தேடப்பட்டு வருகின்றனர்.

இவர்களைக் கையாளுபவரான பிரதான சந்தேக நபர், இந்தியாவுக்கு தப்பியோடி விட்டார் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அடையாளம் தெரியாத இடத்தில் இருந்து  புளியங்குளத்துக்கு ஆயுதப் பொதியை எடுத்து வந்தவரை  காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *