மேலும்

அரசியல் உறுதியற்ற நிலையால் பலாலி விமான நிலைய அபிவிருத்தியில் இழுபறி

சிறிலங்காவின் அரசியல் உறுதியற்ற நிலையினால், இந்தியாவின் உதவியுடன் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம், தாமதமடைந்துள்ளது என்று இந்திய விமானத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை வரையுமாறு, இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையிடம் கடந்த செப்ரெம்பர் மாதம்  இந்திய வெளிவிவகார அமைச்சு கோரியிருந்தது.

எனினும், சிறிலங்காவின் அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இந்த திட்டத்துக்கு இன்னமும், இந்திய வெளிவிவகார அமைச்சு பச்சைக்கொடி காண்பிக்கவில்லை என்று வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

மியான்மாரின் காலே மற்றும் சிறிலங்காவின் பலாலி விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சுடன், இந்திய விமான நிலைய அதிகாரசபை புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டிருந்தது என்று இந்தியாவின்  விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஜயந்த் சின்ஹா, கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

மியான்மார் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதும்,  சிறிலங்காவில் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகளால், வெளிவிவகார அமைச்சின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று தனது பெயரை வெளியிட விரும்பாத,  இந்திய விமான நிலைய அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இன்னமும் பலவீனமாக உள்ளது. வரும் மாதங்களில் உறவுகள் வலுவடைந்தால், நிச்சயமாக நாங்கள் விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் முயற்சிகளை முன்னெடுப்போம்” என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *