மேலும்

அமெரிக்கா பறக்கிறது சிறிலங்கா அரசின் உயர்மட்டக் குழு

அரசியல் குழப்பங்களை அடுத்து இடைநிறுத்தப்பட்ட அமெரிக்காவின் நிதியுதவியை மீளப் பெறுவதற்காக, சிறிலங்கா அரசின் உயர்மட்டக் குழுவொன்று வொசிங்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

சிறிலங்காவுக்கு மிலேனியம் சவால் நிதியத்தின் ஊடாக, 480 மில்லியன் டொலர் ( 87 பில்லியன் ரூபா) நிதியுதவி வழங்கப்படும் என்று அமெரிக்கா கடந்த செப்ரெம்பர் மாதம், அறிவித்திருந்தது.

இதுதொடர்பான உடன்பாடு டிசெம்பர் மாதம் கொழும்பில் கையெழுத்திடப்படவிருந்தது.

எனினும், ஒக்ரோபர் மாதம் சிறிலங்காவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து, இந்த உதவித் திட்டத்தை அமெரிக்கா இடைநிறுத்தியது.

இந்தநிலையில், மீண்டும் பதவிக்கு வந்துள்ள ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், மிலேனியம் சவால் நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களை நடத்துவதற்கு உயர்மட்டக் குழுவை அமெரிக்காவுக்கு அனுப்பவுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நிதியமைச்சின் செயலர் எச்.எஸ்.சமரதுங்க ஆகியோரைக் கொண்ட குழு, இந்த மாத இறுதியில் வொசிங்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

சிறிலங்காவில் மீண்டும் சட்டபூர்வமான அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளதை அடுத்து. இடைநிறுத்திய நிதியுதவியை அமெரிக்கா வழங்கும் என்று எதிர்பார்ப்பதாக, நிதியமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், இந்த நிதியுதவியை மீளப்பெற முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், அந்த அதிகாரி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *