மேலும்

சிறிலங்காவுக்கு அனைத்துலகம் நெருக்குதல் கொடுக்க வேண்டும் – விக்னேஸ்வரன் அறைகூவல்

என்றோ ஒரு நாள் அனைத்துலக சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும், இந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பொறுமையுடன் காத்து நிற்கின்றனர் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று முற்பகல் நடந்த முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய அவர்,

பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்த விதமான நீதியையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலும், தொடர்ந்து நீதிக்காகவும், தமது அடிப்படை உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் வீதிகளில் நின்று எமது மக்கள் போராடி வருகின்ற நிலையிலும், பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பின் கீழ் வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இன்று நாம்  9 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நாளை கனத்த இதயங்களுடன் நினைவு கூருகின்றோம்.

மனித நாகரிக வளர்ச்சியின் உச்சத்தில் உலகம் இருக்கும் இன்றைய 21ம் நூற்றாண்டில் மனித குலத்துக்கு எதிரான படுகொலைகள்,  சுத்திகரிப்புக்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் நோக்கத்துடன் 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை என்ற  தனிப்பிரிவு  உருவாக்கப்பட்டது.

அச் சபை நிறுவப்பட்டு 3 வருட காலங்களுக்குள்ளாகவே எமது மக்கள் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். சாட்சிகள் இல்லாப் போரினை நிகழ்த்தி எமது அப்பாவி மக்கள் பலர் கொலை செய்யப்பட்டார்கள்.

இந்தப் போருக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் மனிதநேயப் பணியாளர்கள் எவருமே உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

சாட்சியங்கள் இல்லாத நிலையில் அல்லது சாட்சியங்களை உள்விடாத நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொய்யான பரப்புரைகள் மூலம் அனைத்துலக சமூகம் இலங்கை அரசினால் தவறாக வழிநடத்தப்பட்டது.

இவ்வாறான பொய்யும் புரட்டுமே இங்கு நடந்த அழிப்பை அனைத்துலக சமூகம் தடுக்க முடியாமல் போனமைக்கு ஒரு காரணம்.

ருவாண்டா, பொஸ்னியா போன்ற நாடுகளை உதாரணம் காட்டி எமக்கான நீதி செயற்பாடுகள் பல தசாப்தங்கள் செல்லலாம் என்று மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி அரைகுறை தீர்வை திணிக்கும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் ருவாண்டா, பொஸ்னியா ஆகிய நாடுகளில் இனப்படுகொலை இடம்பெற்ற காலமும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்ற காலமும் வேறுபட்டவை.

முன்னைய படுகொலைகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட அனைத்துலக சமூகம் இப்படியான கொடூரங்கள் இனிமேலும் எந்த நாட்டிலும் இடம்பெறக்கூடாது என்ற நோக்கில் பல்வேறு மனித உரிமைகள் பொறிமுறைகளை ஏற்படுத்திய பின்னரே முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்றது.

ஆகவே சட்டங்கள் ஓரளவு வலுவாக இருந்த போதே இந்தப் பேரவலம் நடந்தேறியது.

இறைமையுள்ள ஒரு நாட்டில் மனித உரிமைகள் மீறப்படும்போது அவற்றைத் தடுத்து நிறுத்துவது இன்றுள்ள அனைத்துலக சட்ட இணக்கங்களின் பிரகாரம்  நியாயபூர்வமானது. காலம் பிந்திய நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமனாகும்.

இன்று இந்த நாட்டில் கொலைக் குற்றம் புரிந்தவர்கள் கூட குற்றவாளிகளாகப் பார்க்கப்படுவதில்லை. அவர்களின் இனத்தைப் பொறுத்து வீரர்களாக்கப்படுகின்றார்கள்.

“எமது சிங்கள போர்வீரர் ஒருவரையேனும் சிறை செல்ல விடமாட்டேன்” என்று சமுதாயத்தின் உயரிய மட்டத்தில் இருப்போர் கூறும் போது ஒருவரின் குற்றம் அவரின் இனத்தைப் பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகின்றது.

அனைத்துலகத்துக்கு முன்பாக  ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில்  தீர்மானம் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலப்பு விசாரணைப் பொறிமுறையை இலங்கை அரசானது இன்று மறுதலித்து நிற்கும் நிலையில் கடந்த 70 வருடங்களில் எவ்வாறு தமிழ் மக்களை தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் ஏமாற்றி இருப்பார்கள் என்பதை அனைத்துலக சமூகம் இனிமேலாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.

இன்னமும்  மகாவம்ச சிந்தனையில் திளைத்திருக்கும் சிங்கள அரசியல்வாதிகள் முள்ளிவாய்க்கால் அழிப்பை தமிழ் – சிங்களப் போராகவே கருதி, தம் இனத்தின் வெற்றி என்ற மனோபாவத்தில்த்தான் இருந்து வருகின்றார்கள்.

ஒரு சிங்களப் போர் வீரன் தமிழ் மக்களுக்கு எதிராக எந்தக் குற்றத்தைப் புரிந்திருந்தாலும் அது குற்றமே அல்ல என்று வாதாடும் சிங்கள அரசியல் தலைமைகளே இன்று இந்த நாட்டில் காணப்படுகின்றார்கள்.

ஆகவே தொடர்ந்தும் கால நீடிப்புக்களை இலங்கை அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகம் வழங்கக் கூடாது.

கடந்த ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் ஆணையாளரால் கூறப்பட்டதை நினைவுபடுத்தி “இலங்கையில் பொறுப்புக் கூறலை ஏற்படுத்த உதவும் வகையில் உலகளாவிய விசாரணை அதிகாரத்தை பிரயோகிப்பது உட்பட ஏனைய வழிவகைகளையும் உறுப்பு நாடுகள் ஆராயவேண்டும்” என்று இந்த சந்தர்ப்பத்தில் அவருடன் சேர்ந்து அனைத்துலக  சமூகத்தை இத்தால் வேண்டி நிற்கின்றேன்.

எந்தவொரு நாடும் தனது குடிமக்களை வீதிக்கு விரட்டி அவர்களின் வாழ்விடங்களை அடாத்தாக  பிடித்து வைத்திருப்பதில்லை.

துரதிர்ஷ்டவசமாக இலங்கையின் வடக்கு கிழக்கில் அது தான் நடைபெறுகின்றது. எம்மக்கள் இன்று வீதிகளில் இறங்கி வருடக்கணக்கில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்  வருடக்கணக்கில் எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி தொடர்ந்து தடுப்பு முகாம்களில்  வாடி வதங்கி வாழ்ந்து வருகின்றார்கள். “கைவாங்குவோம்” என்ற தடைச் சட்டம் கால தாமதமாகியும் கைவாங்கப் படவில்லை.

வன்னி நிலப்பரப்பு அதிதீவிர சிங்கள மயமாக்கலுக்கு உட்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட சில இடங்களை விடுவிக்கும் நடவடிக்கைகளுக்குக் கூட  மீள்குடியேற்றத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து இராணுவத்திற்குப் பெரும் தொகை நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதன் தாற்பரியம் எமக்கு விளங்கவில்லை.

மீள் குடியேற்றத்திற்கு அனைத்துலகத்தினராலும் அரசாங்கத்தினராலும் ஒதுக்கப்பட்ட நிதிகளை எவ்வாறு படைகள் எடுத்துச் செல்ல முடியும்?

எமது மக்களின் அழைப்பின் பேரில் படைகள் இங்கு வரவில்லை. முகாமிட்டிருக்கவில்லை. போர் முடிந்ததும் உடனே வெளியேற வேண்டிய அவர்கள் எமது காணிகளை அடாத்தாகப் பிடித்து வைத்திருந்தார்கள். வளங்களை அவர்கள் சுகித்து வந்தார்கள்.

இப்பொழுது அவர்கள் எம் மண்ணை விட்டு வெளியே செல்ல எமக்கென ஒதுக்கப்பட்ட பணம் அவர்களுக்குக் கையளிக்கப்படுகின்றது. படைகளுக்குக் கொடுத்த பணம் எமது மக்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதி என்பதை அரசாங்கம் மறந்து விட்டது.

ஒருவேளை அனைத்துலக நெருக்குதலுக்கு ஆளாகியிருக்கின்ற அரசாங்கத்தின் கோரிக்கைக்கு செவி சாய்க்க படையினர் மறுத்ததால்த்தான் அவர்களுக்கு எங்கள் பணத்தை இலஞ்சமாகக் கொடுத்து வெளியேற்றுகின்றார்களோ என்று நாம் எண்ண வேண்டியிருக்கின்றது.

இதுவே இன்றைய வடக்கு –  கிழக்கின் யதார்த்த நிலையாகும்.

இலங்கையின் கடந்த 70 வருட காலவரலாற்றைப் பார்க்கும் எவருக்குமே அனைத்துலக தலையீடுகள் இல்லாமல், நெருக்குதல்கள் இல்லாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிப் போவது என்பது இயலாத காரியம் என்பது புலப்படும்.

அனைத்துலக அரங்கில் நெருக்குதல்களை உலக நாடுகள் எமது நாட்டுக்குக் கொடுக்க வேண்டும் என்று பகிரங்கமாகவே இந்தத் தினத்தில் உலக நாடுகளை நோக்கி அறை கூவல் விடுகின்றேன்.

போர் முடிந்த பின் சமாதான காலத்தில் ஒரு இனத்தைத் தொடர்ந்து தமது ஆதிக்கத்தினுள் கட்டுப்பட வைத்து எமது தொடர் அரசாங்கங்கள் செயலாற்றி வருவதை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனது அருமை மக்களே!

நாம் தொடர்ந்தும் எடுத்தார் கைப்பிள்ளையாகச் செயற்படாமல் ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாட்டினுடாக இனஅழிப்புக்கான நீதிவேண்டியும் எமக்கான அரசியல் அபிலாசைகளை அடையும் முயற்சிகளை முன்னெடுத்தும் ஒன்றிணைந்து கொண்டு செல்ல அணிதிரளுமாறு இன்றைய நாளில் உங்களை அழைக்கின்றேன்.

21ஆம் நூற்றாண்டின் நவநாகரிக மானிட யுகத்தில் இனஅழிப்புக்குட்படுத்தப்பட்ட இனம் எமது இனம் என்பதை நாம் மனதில் நிறுத்துவோமாக” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *