மேலும்

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – சிறிலங்கா அதிபர் திட்டவட்டம்

போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் உள்நாட்டு செயல்முறைகளில், வெளிநாட்டு நீதிபதிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

போரில் இறந்த சிறிலங்கா படையினரை  நினைவு  கூரும் வகையில், குருநாகலவில் அமைக்கப்பட்ட, போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நாட்டைப் பாதுகாத்த படையினரை சிறிலங்கா அரசாங்கம் காயப்படுத்தாது. அரசியல் கட்சிகள் தமது நலன்களுக்காக படையினரைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.

சிறிலங்கா படையினருக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் பொய்யானவை.

இராணுவத்தினரை அரசாங்கம் பழிவாங்குவதாக குற்றம் சாட்டப்பட்டாலும், உண்மையில் முன்னைய ஆட்சிக்காலத்தில் தான் இராணுவத்தினர் பழிவாங்கப்பட்டனர்.

சிறிலங்கா படையினரின் பெருமைகளைப் பாதுகாக்க தற்போதைய அரசாங்கம் அனைத்துலக சமூகத்தின் ஆதரவுடன் தனது பொறுப்புகளை நிறைவேற்றி வருகிறது.

மின்சார நாற்காலி பற்றிய பேச்சுக்களுக்கும்,  இராணுவத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வருவது பற்றிய பேச்சுகளுக்கும் அரசாங்கம் முடிவு கட்டியிருக்கிறது.

சில வழக்குகள் தொடர்பாக விசாரணைக்காக குறிப்பிட்ட சில இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அது, இராணுவத்தினர் வேட்டையாடப்படுவதாக அர்த்தமில்லை.

நாட்டைப் பாதுகாத்த படையினர் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அவர்களுக்கு உயர்ந்த மதிப்பை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *