மலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்களை சந்திக்க முடியவில்லை – சிறிலங்கா அதிகாரிகள்
மலேசியாவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்த 131 அகதிகளையும் சிறிலங்கா அதிகாரிகளால் இதுவரை சந்திக்க முடியவில்லை. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முயன்ற போது கடந்த 1ஆம், நாள் 131 இலங்கையர்கள் கடலில் வைத்து மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். ஐந்து நாட்களின் பின்னரே அது குறித்த தகவல் வெளியிடப்பட்டது.
எனினும் மலேசியாவில் தேர்தலுக்குப் பின்னர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை அங்குள்ள சிறிலங்கா தூதரக அதிகாரிகளால் சந்திக்க முடியவில்லை.
நாளை அவர்களுடனான சந்திப்புக்கு ஒழுங்கு செய்ய முடியும் என்று நம்புவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.