மேலும்

20 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற முயன்ற சிறிலங்கா அதிபரின் தலைமை அதிகாரி கைது

சிறிலங்கா அதிபரின் தலைமை அதிகாரி எச்.கே.மகாநாமவும், அரசாங்க மரக் கூட்டுத்தாபன தலைவரான பி.திசாயக்கவும், 20 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற போது, கைது செய்யப்பட்டனர்.

நேற்று மாலை இந்திய வணிகர் ஒருவரிடம் இருந்து, இலஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்ட போது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கந்தளாய் சீனித் தொழிற்சாலை காணியை கொள்வனவு செய்த இந்திய வணிகர், தொழிற்சாலைக்கான இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கும், கட்டடங்களைப் பெற்றுக் கொள்வதற்கும், முயன்ற போது, இந்த இரு அதிகாரிகளும் அதற்காக இலஞ்சம் கோரியுள்ளனர்.

இதற்கான ஒழுங்குகள் மற்றும் அனுமதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு 540 மில்லியன் ரூபா இலஞ்சம் கோரப்பட்டுள்ளது. நீண்ட பேரங்களை அடுத்து, 100 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.

முதற்கட்டமாக நேற்று மாலை 20 மில்லியன் ரூபா இலஞ்சம் கொடுக்கப்பட்டது. இதுபற்றி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இந்திய வணிகர் தகவல் அளித்தார்.

உடனடியாக செயற்பட்ட ஆணைக்குழு அதிகாரிகள், கொழும்பில் உள்ள ஆடம்பர விடுதி ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் முதற்கட்ட இலஞ்சப் பணம் கைமாற்றப்பட்ட போது, இரண்டு மூத்த அதிகாரிகளையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட போது, இருவரும், இலஞ்சப் பணத்தை எண்ணிக் கொண்டிருந்ததாக ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் மூத்த அரச அதிகாரியான மகாநாம, தற்போது சிறிலங்கா அதிபரின் தலைமை அதிகாரியாக பணியாற்றுகிறார். முன்னர் இவர், காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் செயலராகப் பணியாற்றினார்.

மூன்று மாதங்களுக்கு முன்னரே இவர் சிறிலங்கா அதிபர் செயலக தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இரண்டாவது சந்தேக நபரான பி. திசநாயக்க, சந்திரிகா குமாரதுங்க சிறிலங்கா அதிபராக இருந்த போது, அவரது செயலராக பணியாற்றியவர். தற்போது அரச மரக் கூட்டுத்தாபன தலைவராக இருக்கிறார்.

கைது செய்யப்பட்ட இரண்டு மூத்த அரச அதிகாரிகளும் வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *