மேலும்

லசந்த கொலை இரகசியங்கள் – சிறிலங்காவின் மூத்த படை அதிகாரிகள் முரண்பாடான வாக்குமூலம்

lasantha_murderசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்ட சிறிலங்காவின் மூன்று மூத்த முன்னாள் படை அதிகாரிகளும் முரண்பாடான வாக்குமூலங்களை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னாள் கூட்டுப் படைகளின் தளபதி எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா, கூட்டுப்படைகளின் தலைமையக நடவடிக்கைப் பணிப்பாளராக பணியாற்றிய மேஜர் ஜெனரல் குமார ஹேரத், கூட்டு நடவடிக்கைக்கான தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மனோ பெரேரா ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

காலை 10 மணி தொடக்கம், பிற்பகல் 2 மணி வரை இந்த விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

இந்த விசாரணைகளின் போது, அத்திட்டியவில் லசந்த விக்கிரமதுங்க 2009 ஜனவரி 8ஆம் நாள் படுகொலை செய்யப்பட்ட சற்று நேரத்தில், அவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் கொல்லப்பட்டதாக கூட்டுப் படைகளின் தளபதியாக இருந்த எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா, தம்மிடம் தெரிவித்தார் என்று கூட்டுப்படைகளின் தலைமையக நடவடிக்கைப் பணிப்பாளராக பணியாற்றிய மேஜர் ஜெனரல் குமார ஹேரத், குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கூறினார்.

கூட்டு நடவடிக்கை தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா இந்த தாக்குதல் தொடர்பாக தகவல் தெரிவித்ததும், எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா, தனது பணியகத்துக்கு வருமாறு அழைத்திருந்தார் என்றும் அண்மையில் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் குமார ஹேரத், குறிப்பிட்டுள்ளார்.

இதன்போதே, லசந்த விக்கிரமதுங்க கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டதாக எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா கூறியுள்ளார்.
சம்பவம் நடந்தவுடனேயே லசந்த விக்கிரமதுங்க கூரிய ஆயுதம் ஒன்றினால் தான் தாக்கப்பட்டார் என்பது இராணுவத்துக்குத் தெரியும் என்றும் மேஜர் ஜெனரல் குமார ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக சிரச அறிவிப்பதற்கு 20 நிமிடங்கள் முன்னதாகவே, கூட்டுப் படைகளின் தலைமையகம் சம்பவம் பற்றி அறிந்திருந்தது என்றும் சாட்சியம் அளி்க்கப்பட்டுள்ளது.

எனினும், எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா மற்றும் மேஜர் ஜெனரல் மனோ பெரேரா ஆகியோரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறுக்கு விசாரணை மேற்கொண்ட போது, மேஜர் ஜெனரல் குமார ஹேரத் தெரிவித்த தகவலை அவர்கள் நிராகரித்தனர்.

அப்போது கொழும்பு நடவடிக்கைத் தளபதியாக இருந்த பிரிகேடியர் அனுர பெரேரா சிலவேளைகளில், எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேராவுக்கு தொலைபேசி மூலம் அறிவித்திருக்கக் கூடும் என்று  மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்துள்ளார்.

கொலை நடந்த இடத்துக்கு தாம் செல்லவேயில்லை என்றும் மேஜர் ஜெனரல் மனோ பெரேரா உறுதியாக தெரிவித்துள்ளார்.

லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக காவல்துறை புலனாய்வு அதிகாரி தகவல் பரிமாறியிருந்த போதும், அடுத்த வாரம் நடந்த வாராந்த கூட்டுப்படைகளின் தலைமையக கலந்துரையாடலில் இந்த விடயம் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச தலைமையில் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் செவ்வாய்க்கி்ழமைகளில் கூட்டப்படுவதற்கு முன்னர் கூட்டுப்படைத் தலைமையகத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *