மேலும்

சிறிலங்கா இனப்படுகொலைக்கு நீதிகோரும் தமிழ்நாட்டுக் காரணி- அனைத்துலக ஊடகம்

jallikattu (1)சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல்கள் தொடர்பாக மார்ச் 2017ல் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் ஆராய்வதற்கு சில நாட்களின் முன்னர், சிறிலங்கா அரசாங்கம் தனது யுத்தக் குற்ற விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்தது.

ஆனால் இவ்வாறு அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக சிறிலங்கா அரசாங்கமானது போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு மேலும் இரண்டு ஆண்டுகளை ஐ.நா கால அவகாசமாக வழங்குவதற்கான தீர்மானமானது மார்ச் 23 அன்று நிறைவேற்றப்பட்டது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா மீது கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் போன்றே இத்தீர்மானமும் அமெரிக்காவின் தலைமையில் அதன் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

2012 தொடக்கம் 2014 வரையான காலப்பகுதியில், அமெரிக்காவின் ஆதரவுடன் சிறிலங்கா மீது அழுத்தம் கொடுக்கும் விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சீனாவுடன் சிறிலங்கா நெருக்கமான உறவைப் பேணியதன் காரணமாக ராஜபக்ச மீது அமெரிக்காவால் அழுத்தம் இடப்பட்டது. எனினும், ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சிறிலங்காவின் ஆட்சி அதிகாரமானது வலதுசாரிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் சென்றதுடன் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் சிறிலங்கா தொடர்பான தனது நிலைப்பாட்டை அமெரிக்கா மாற்றிக் கொண்டது.

இதன் பின்னர் ஐ.நா மனித உரிமைகள் பேரவைகள் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானங்கள் சிறிலங்காவிற்குச் சார்பானதாக அமைந்துள்ளன. அதாவது சிறிலங்கா மீதான அமெரிக்காவின் அழுத்தங்கள் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து குறைவடைந்துள்ளதை இத்தீர்மானங்கள் சுட்டிநிற்கின்றன.

சீன ஆதரவு ராஜபக்சவின் ஆட்சி சிறிலங்காவில் இடம்பெற்ற போது அமெரிக்காவுடன் இணைந்து செயற்படாத இந்தியா மார்ச் 2017ல் ஐ.நா மனித உரிமைகள் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் போது அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு தனது முழு ஆதரவையும் வழங்கியிருந்தது. ஆனால் இந்தியா தனது நிலைப்பாட்டை விளங்கப்படுத்த வேண்டிய தேவையுள்ளதையும் கண்டுகொண்டது.

மார்ச் 2017 பேரவையின் தீர்மானத்திற்கு இந்திய அரசாங்கம் ஏன் ஆதரவு வழங்கியது என்பதை நியாயப்படுத்தும் முகமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இந்திய மேல் சபையான ராஜ்ய சபாவில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார். அதாவது ஆக்கபூர்வமானதும் கூட்டு ஒத்துழைப்புடன் கூடியதுமான ஈடுபாட்டின் ஊடாக மனித உரிமைகளைப் பாதுகாப்பது சிறப்பானது என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்துவதாகவும் இதனால் சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதை நோக்காகக் கொண்டே இந்திய மத்திய அரசாங்கம் சிறிலங்கா தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்தியாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தியிருந்தார்.

‘தமிழ்நாட்டுக் காரணியை’ அடிப்படையாகக் கொண்டே இந்திய மத்திய அரசாங்கமானது சிறிலங்கா மீதான தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டிய கட்டாயத்தைக் கொண்டிருந்தது. சிறிலங்கா தனது நாட்டில் இடம்பெற்ற யுத்தக் குற்ற மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு மேலும் இரண்டு ஆண்டு கால அவகாசத்தை வழங்கிய மார்ச் 2017 மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா மீதான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு இரண்டு நாட்களின் முன்னர், பேரவையின் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என தமிழ்நாடு ஆளும் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வாசுதேவன் மைத்திரேயன் இந்திய நாடாளுமன்றின் ராஜ்ய சபையில் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

jallikattu (1)

போர்க் குற்ற வழக்கை விசாரணை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கமானது வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள் மற்றும் விசாரணையாளர்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இத்தீர்மானம் வலியுறுத்துவதாக தமிழ்நாட்டு அரசியல்வாதியான வைகோ குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்நாடானது தனது முதல்வர் ஜெயராம் ஜெயலலிதாவை இழந்த பின்னர் அரசியல் ரீதியாகப் பாதிப்பைச் சந்தித்துள்ளதால் தமிழ்நாட்டின் உணர்வுகளைக் கருத்திற் கொள்ள வேண்டிய தேவை இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சி கொண்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான இந்திய ஆளும் கட்சியானது சிறிலங்காவில் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற போது சிறிலங்கா அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்கியமை தொடர்பில் தமிழ்நாடு அதிருப்தி அடைந்திருந்தது. இந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் முகமாக ஜனவரி 2009ல் தமிழ்நாட்டில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களில் தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் கற்றுக்கொண்டிருந்த மாணவர்களால் தலைமை தாங்கப்பட்டன. தமிழ்நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழலைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாட்டு அரசு வெற்றி பெற்றாலும் கூட, மக்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்தளிப்பு உணர்வு குறையவில்லை.

சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இந்திய காங்கிரஸ் ஆளும் அரசாங்கத்தால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்ட வேளையில் இக்கூட்டணி அரசாங்கத்தில் தமிழ்நாட்டை ஆட்சி செய்த திராவிட முன்னேற்றக் கழகமும் அங்கம் வகித்திருந்தமையால் தமிழ்நாட்டு மக்களின் கோபமானது தி.மு.க மீது மேலும் அதிகரித்தது. மே 2011ல் தமிழ்நாட்டில் தேர்தல் இடம்பெற்ற போது, அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தில் அழிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர் தேர்தல் இடம்பெற்ற போது, திராவிட முன்னேற்றக் கழகமானது அதன் எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் பலமான வாக்கு வித்தியாசத்துடன் தோல்வியைச் சந்தித்தது.  மக்கள் மத்தியில் கனன்று கொண்டிருந்த ஆத்திர உணர்வை அ.இ.அ.தி.மு.க தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இத்தேர்தலில் வெற்றி பெற்றது.

2011 ஜூன் மாதம், அ.இ.அ.தி.மு.க தலைமையிலான தமிழ்நாட்டு அரசாங்கத்தால் ஏகமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. சிறிலங்காவிற்கு எதிராக  இந்திய மத்திய அரசாங்கம் பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் முகமாகவே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்ச் 2013ல், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதாவது சிறிலங்கா அரசால் முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தின் போது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதை முதன்மைப்படுத்தியே இந்த ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் சிறிலங்காவில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாட்டு சட்டசபையில் பிறிதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2014ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க தனது 39 ஆசனங்களில் 37 ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டது. வேறு மாநிலங்களில் பா.ஜ.க பெரும்பான்மை வெற்றியைப் பெற்ற போதிலும், பாரதீய ஜனதாக் கட்சியால் தமிழ்நாட்டில் ஒரு ஆசனத்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

2015ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இடம்பெற்ற போது, யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணை இடம்பெறுவதை விட அனைத்துலக விசாரணை இடம்பெறுவதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என ஈழத்தமிழர்களால் கோரிக்கை விடுக்கப்பட்ட போது, போர்க் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கு எதிராகவும் அனைத்துலக விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என இந்திய மத்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் எனக் கோரி தமிழ்நாட்டு சட்டசபையில் பிறிதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அ.இ.அ.தி.மு.க வின் இவ்வாறான அரசியல் நிலைப்பாடு காரணமாக 2016ல் தமிழ்நாட்டில் இடம்பெற்ற மாநிலத் தேர்தலில் 1984 தொடக்கம் ஆட்சியைத் தன் வசம் வைத்திருந்த தி.மு.க விற்கான வாக்குப் பலம் சிதறடிக்கப்பட்டு அ.இ.அ.தி.மு.க அமோக வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

இவ்வாண்டின் ஜனவரி நடுப்பகுதி தொடக்கம், தமிழ்நாட்டில் வன்முறையற்ற ஏழு நாள் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எட்டாவது நாள் காவற்துறையினர் இதில் தலையீடு செய்ததால் அமைதி வழிப் போராட்டாமனது வன்முறையில் முடிவடைந்தது. ஜல்லிக்கட்டைத் தடைசெய்வதற்கு எதிரான ஆர்ப்பாட்டமாகவே இது மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பல பத்தாயிரக்கணக்கானவர்களுக்கு எதிராக வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டன.

தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டதாக முழு உலகமே கூறும் இதேவேளையில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இந்திய மத்திய அரசாங்கமானது தனது ஆதரவை வழங்குவதை எதிர்த்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இனப்படுகொலை மற்றும் பாரிய மீறல்கள் இடம்பெறும் எட்டு ‘சிவப்பு எச்சரிக்கை’ நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று என 2008 டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட இனப்படுகொலைத் தடுப்புத் திட்டத்தில் வரையறுக்கப்பட்டது. இதேபோன்று பெப்ரவரி 2009ல், சிறிலங்காவில் இடம்பெறும் இனப்படுகொலையானது பொஸ்னியன் சிரப்ரனிக்கா இனப்படுகொலைக்குச் சமமானது என பொஸ்ரன் குளோப் என்ற சுட்டியில் ஒப்பீடு செய்யப்பட்டது. சிறிலங்கா அரசாங்கத்தால் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களை ஓரிடத்தில் ஒன்றிணைத்து அவர்களைப் படுகொலை செய்வதற்கு வசதியாகவே சிறிலங்கா அரசாங்கத்தால் போர் தவிர்ப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டதாக பி.பி.சி செய்திச் சேவையின் சிறிலங்காவிற்கான முன்னாள் செய்தியாளரான பிரான்சிஸ் ஹரிசன் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஜனவரி 2017ல் தமிழ்நாட்டில் இடம்பெற்ற இறுதி ஆர்ப்பாட்டங்கள் உள்ளடங்கலாக 2009 தொடக்கம் இடம்பெற்று வரும் அனைத்து ஆர்ப்பாட்டங்களும் மாணவர்களாலேயே தலைமை தாங்கப்பட்டன. இந்நிலையில் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக அ.இ.அ.தி.மு.க வால் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளும் தமிழ்நாட்டின் இளந்தலைமுறையிலிருந்து உருவாகும் அடுத்த தலைவர்,  சிறிலங்கா மீதான இந்தியாவின் நிலைப்பாட்டில் தீர்மானத்தை எடுப்பதில் செல்வாக்குச் செலுத்தும் தமிழ்நாட்டுக் காரணியை உறுதிப்படுத்துவார் என ஊகிக்கப்படுகிறது.

வழிமூலம்       – Open Democracy
ஆங்கிலத்தில்  – ANA PARARAJASINGHAM
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *