மேலும்

சிறிலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருந்து கிராமத்தை மீட்கப் போராடும் முள்ளிக்குளம் மக்கள்

mullikulam-puthinappalakai (1)‘எனது அப்பா, எனது அப்பாவின் அப்பா, அவரின் அப்பா என எமது தலைமுறையினர் முள்ளிக்குளம் கிராமத்திலேயே வாழ்ந்துள்ளனர்.  எனது பாட்டனாரின் காலத்திலேயே எமது குடும்பத்தினர் வணங்கும் தேவாலயம் அமைக்கப்பட்டது. எமது கிராமத்தின் ஊடாக நான்கு ஆறுகள் ஓடுகின்றன. இவற்றில் ஒரு ஆற்றை நாங்கள் குளிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தினோம்.

கடலில் மீன்பிடிக்க முடியாத காலத்தில், இந்த  ஆறுகளிலேயே நாங்கள் மீன் பிடித்தோம். எமது கிராமத்தில் வயல், பசுக்கள், கோழிகள், எருதுகள் என எல்லா வளங்களும் நிறைந்து காணப்பட்டன. இதனால் எமக்கு குடிப்பதற்கோ அல்லது சாப்பிடுவதற்கோ பஞ்சமே இல்லை.

நாங்கள் பின்னேரங்களில் ஒன்றுகூடி நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்துவோம். எமது கிராமத்தில் வாழ்ந்த அனைவரும் மிகவும் மகிழ்வுடனேயே வாழ்ந்தோம். எமக்கு அருகில் வாழ்ந்த முஸ்லீம் மக்களுடன் இணைந்து நாங்கள் மிகவும் அமைதியான வாழ்வை வாழ்ந்தோம்.

யுத்த காலத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டபோது, நிலைமை சீராகும் வரை நாங்கள் எமக்கருகில் வாழ்ந்த முஸ்லீம் மக்களின் வீடுகளில் அடைக்கலம் புகுவோம். நிலைமை சீராகிய பின்னர் மீண்டும் நாங்கள் எமது கிராமத்திற்குத் திரும்புவோம். மீண்டும் நாங்கள் அனைவரும் அமைதியாக வாழவேண்டும் என இறைவனை ஒவ்வொரு நாளும் பிரார்த்திப்பேன். நான் இந்தப் பூமியை விட்டுப் போகும் போதாவது நாங்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும்’ என முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 88 வயதான எம்.பிரான்சிஸ் வாஸ் தெரிவித்தார். இவர் 2007 தொடக்கம் இன்னமும் தனது சொந்த ஊருக்குச் செல்லவில்லை.

மீண்டும் மூன்று நாட்களில் கிராமத்திற்குத் திரும்பலாம் என செப்ரெம்பர் 08, 2007 அன்று சிறிலங்கா இராணுவத்தினரால் வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில் முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால் பத்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட, இந்தக் கிராமத்து மக்கள் தமது சொந்தக் கிராமத்திற்குத் திரும்பிச் செல்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த மக்கள் தமது வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்வதற்குக் கூடத் தமது சொந்தக் கிராமத்திற்குச் செல்ல முடியவில்லை. 2007ல் இந்த மக்கள் தமது சொந்தக் கிராமமான முள்ளிக்குளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், இங்கு வட- மேற்கு  மாகாணங்களுக்கான கடற்படை கட்டளைத் தலைமையகம் அமைக்கப்பட்டது. இந்த மக்கள் கடந்த பத்தாண்டாக தமது சொந்தக் கிராமத்திற்கு விடுமாறு கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். மகஜர்களைக் கையளித்தனர். பல்வேறு கலந்துரையாடல்களையும் மேற்கொண்டனர். இவர்களின் இந்த முயற்சிகள் பொய்யான வாக்குறுதிகளால் இடைநிறுத்தப்பட்டன.

மறிச்சுக்கட்டி என்கின்ற கிராமத்துடன் இணைந்த முள்ளிக்குளம் கிராமமானது முஸ்லீம் மக்களுடன் அமைதியாக வாழ்ந்த வாழ்வை முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முதியவரான பிரான்சிஸ் வாஸ் நினைவுபடுத்தினார். பல்வேறு கடினமான தருணங்களில் முஸ்லீம், தமிழர் என எவ்வித பாகுபடுமின்றி இவ்விரு இனத்தவர்களும் எவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்தனர் என்பது இங்கு நினைவுகூரப்பட்டுள்ளது.

mullikulam-puthinappalakai (1)

இந்நிலையில் தமது வீடுகளுக்குத் தாம் திரும்பிச் செல்ல வேண்டும் எனக் கோரி அண்மையில் முள்ளிக்குளம் மக்களால் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமானது மன்னார்-புத்தளம் வீதியில் அமைந்துள்ள முள்ளிக்குளம் கிராமத்திற்கு அருகிலுள்ள முஸ்லீம்  ஒருவரின் வீட்டிலேயே மேற்கொள்ளப்பட்டது.

நிலங்களை மீள ஒப்படைக்குமாறு கோரியும் காணாமற் போனவர்கள் தொடர்பில் உண்மை மற்றும் நீதி எட்டப்பட வேண்டும் எனக் கோரியும் வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான போராட்டங்கள் மூலம் முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது சொந்த ஊருக்குச் செல்லமுடியும் என நம்பிக்கை கொண்டுள்ளனர்.

கேப்பாப்பிலவு போன்ற இடங்களிலுள்ள நிலங்களைத் தம்மிடம் மீள ஒப்படைக்குமாறு கோரி பொதுமக்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதன் பயனாக அவர்களது சொந்தக் கிராமம் கடந்த மாதம் அவர்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டதானது முள்ளிக்குளம் கிராம மக்களுக்கும் நம்பிக்கையை அளித்துள்ளது.

மலன்காடு என்கின்ற இடத்தில் முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 120 குடும்பங்கள் தற்காலிகமாக வாழ்வதுடன், இக்கிராமத்தைச் சேர்ந்த 150 குடும்பங்கள் காயக்குளியிலும் வாழ்வதுடன் கிட்டத்தட்ட 100 குடும்பங்கள் யுத்தத்தின் போது இந்தியாவிற்கும் தப்பிச் சென்றுள்ளனர். ஆனால் தமது சொந்தக் கிராமத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற ஆவலுடன் இந்த மக்கள் காத்திருக்கின்றனர்.

‘மலன்காடு மற்றும் காயக்குளியைச் சேர்ந்த எமது கிராமத்தைச் சேர்ந்த 50 வரையான கிராமத்தவர்கள் ஒன்று சேர்ந்து மார்ச் 25 காலை எட்டு மணி தொடக்கம் எமது போராட்டத்தை ஆரம்பித்தோம். எமது நிலங்களை எம்மிடம் மீள ஒப்படைக்குமாறு கோரியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ‘ஏன் இங்கு போராட்டம் செய்கிறீர்கள்?’ எனவும்    ‘மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யாமைக்கான காரணம் என்ன? நீங்கள் அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்குத் தேவையான பேருந்து வசதியை நாங்கள் ஒழுங்குபடுத்தித் தருகிறோம். நாங்கள் உங்களுக்கு பல உதவிகளைச் செய்த போதிலும் நீங்கள் எம்மை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்’ எனவும் கடற்படையினர் எம்மிடம் தெரிவித்தனர்’ என முள்ளிக்குளம் கிராமத்தவர்கள் தெரிவித்தனர்.

mullikulam-puthinappalakai (3)

சிறிலங்கா கடற்படையின் பொறியியல் பாடசாலையாக மாறியுள்ள முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலை

கடற்படையினர் எமக்கு எவ்வித உதவியையும் செய்யத் தேவையில்லை, பதிலாக அவர்கள் எம்மிடம் எமது நிலங்களைத் திருப்பித் தந்தால் அதுவே போதும்’ என கிராம மக்கள் தெரிவித்தனர்.

‘நாங்கள் 2007ல் எமது சொந்தக் கிராமத்தை விட்டு வெளியேறிய போது, 100 வரையான வீடுகள் நல்ல நிலையிலும் 50 வரையான வீடுகள் கூரை வீடுகளாகவும் காணப்பட்டன. அத்துடன் தேவாலயம், கூட்டுறவுச் சங்கம், மூன்று பாடசாலைக் கட்டடங்கள், முன்பள்ளி, இரண்டு வைத்தியசாலைக் கட்டடங்கள், நூலகம், அஞ்சலகம், மீனவர் கூட்டுறவுச் சங்கக் கட்டடம், ஆசிரியர் விடுதி, கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடம், ஆறு பொது மற்றும் நான்கு தனியார் கிணறுகள் மற்றும் ஒன்பது குளங்கள் என பல்வேறு வசதிகளுடன் எமது கிராமம் காணப்பட்டது’ என கிராமத்தவர்கள் நினைவுபடுத்தினர்.

தற்போது இக்கிராமத்தில் 27 வீடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஏனையவை கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஏனைய வீடுகள் அழிக்கப்பட்டு விட்டதாக கடற்படையினர் கூறுகினர். தற்போது இங்கு விவசாயம் செய்வதற்கான அனுமதி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வீதி வழியாக தேவாலயத்தைச் சென்றடைவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் நீர்தாங்கி அணைக்குச் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தாம் விரும்பும் போதெல்லாம் தேவாலயத்திற்குச் சென்று வணங்க முடியாத நிலையில் முதியோர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஞாயிறு பிரார்த்தனைக்குச் செல்வதற்கு கடற்படையினர் பேருந்து ஒழுங்குபடுத்தியுள்ளனர். இதில் மட்டுமே அங்கு செல்ல முடியும். வழமையாக மலன்காடு மற்றும் காயக்குளியிலிருந்து முள்ளிக்குளத்திற்கு குறுகிய வழியாக நடந்து செல்வதற்கு 50-100 மீற்றர் மட்டுமே எடுக்கும். ஆனால் தற்போது முள்ளிக்குளம் தேவாலயத்திற்குச் செல்வதற்கு 3 – 10 கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.

இதேபோன்று முள்ளிக்குளத்திலுள்ள பாடசாலைக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவர்களை கடற்படையினர் தமது பேருந்தில் ஏற்றிச் செல்கின்றனர். இங்கு தரம் ஒன்பது மட்டுமே கல்வி கற்கமுடியும் என்பதால் இதன் பின்னர் தொலைவிலுள்ள பாடசாலைக்கு மாணவர்கள் கற்கச் செல்வதுடன் விடுதிகளில் தங்கி கல்வி கற்கின்றனர்.

முள்ளிக்குளம் கிராமத்து மக்கள் அடிப்படையில் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலை  மேற்கொள்கின்றனர். ஆகவே இவர்கள் கடலுக்குச் செல்வதற்கான தூரமும் குறைவாகவே இருக்க வேண்டும். மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதிலும் பல தடைகள் காணப்படுகின்றன. 2007ல் முள்ளிக்குளத்தை விட்டு வெளியேறும் போது இந்த மக்கள் தம்மிடம் வைத்திருந்த 64 வரையான படகுகள், 90 தெப்பங்கள் மற்றும் 3 மீன் வலைகள் போன்றவற்றை அங்கேயே விட்டுச் சென்றனர்.

mullikulam-puthinappalakai (2)

‘நீங்கள் போராட்டத்தை நிறுத்தாவிட்டால், கடலில் நாங்கள் எமது பலம் என்ன என்பதை உங்களுக்குக் காண்பிப்போம்’ என கடற்படையினர் ஆர்ப்பாட்டத்தின் முதல் நாளன்று கிராம மக்களை அச்சுறுத்தினர். ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டு முதல் சில நாட்களாக கடற்படையினர் மற்றும் சிலாவத்துறையைச் சேர்ந்த காவற்துறையினர் எனப் பலரும் இந்த மக்களின் போராட்டத்தில் தலையீடு செய்தனர். போராட்டம் இரண்டாம் வாரத்தை எட்டிய போது, கடற்படையைச் சேர்ந்த பிராந்தியக் கட்டளைத் தளபதி மற்றும் முக்கிய அதிகாரிகள் இந்த மக்களிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன் தமது தலைமைப் பீடத்திற்கு அறிவிப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் இது தொடர்பில் கொழும்பு அமைதி காத்தது. தேவாலயத் தலைவர்கள் இது தொடர்பில் கொழும்புடன் தொடர்பு கொண்ட போதிலும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

சிறிலங்கா கடற்படையினர் மக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும் இந்த நிலங்களுக்குப் பதிலாக வேறு நிலங்கள் வழங்குவதாக உத்தேசித்தால் இது தொடர்பில் மக்களின் விருப்பங்கள் என்ன என்பது கண்டறியப்பட வேண்டும் எனவும், மக்கள் பலவந்தமாகக் குடியேற்றப்படக் கூடாது எனவும் மனித உரிமை ஆணைக்கு தனது அறிக்கையில் தெரிவித்தது.

மார்ச் 23 அன்று மாவட்டச் செயலரும் அவருடைய பிரதிநிதிகளும் முள்ளிக்குளம் வாழ் மக்களைச் சந்திப்பதற்காகச் சென்றனர். ஆர்ப்பாட்டத்தின் மூலம் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது எனவும், மக்களின் கோரிக்கைகைள் அடங்கிய கடிதம் ஒன்றைத் தம்மிடம் தருமாறும் அதனை தமது மேலதிகாரிகளிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் மக்களைக் கேட்டுக் கொண்டனர். முள்ளிக்குளம் கிராமத்தின் பெரும்பாலான நிலங்கள் மக்களுக்கும் மன்னார் கத்தோலிக்க திருச்சபைக்கும் சொந்தமானதாகும். எஞ்சிய நிலங்கள் அரச காணிகளாகவும் உள்ளன.

இந்த மக்களுக்கு வேறு வீடுகள் வழங்கப்பட்ட போதிலும் இந்த மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன என மாவட்டச் செயலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வினவினார். தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதற்காகவே போராடுவதாகவும் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள வீடுகளை ஏற்றுக் கொள்வதிலும் இந்த மக்கள் தயக்கம் காண்பித்தனர். ‘நாங்கள் எமது சொந்த வீடுகளுக்குச் செல்ல வேண்டும்’ என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

‘எம்மிடம் அனைத்து வளங்களும் இருந்தன. தற்போது நாங்கள் காடுகளில் வாழ்கிறோம். இங்கு நாங்கள் எவ்வாறு வாழமுடியும்? அனைத்தையும் திரும்பப் பெறுவோம் என நான் நம்புகிறேன். எமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளாவது சொந்தக் கிராமத்தில் சந்தோசமாக வாழ வேண்டும்’ என்பதே எனது ஒரேயொரு ஆசை என முதியவரான பிரான்சிஸ் வாஸ் தெரிவித்தார்.

வழிமூலம்       – Ground views
ஆங்கிலத்தில்  – Marisa de Silva,  Nilshan Fonseka and Ruki Fernando
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *