மேலும்

சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் குறித்து இந்தியா கவலை கொள்வது ஏன்? – சசி தாரூர்

Shashi Tharoorசிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் குறித்த இந்தியா கவலை கொள்வதாக, இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தாரூர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சுயசரிதை வெளியீட்டு வழாவில் உரையாற்றிய போதே அவர் இதுபற்றி குறிப்பிட்டுள்ளார்.

15 ஆம் நூற்றாண்டில் சீன அட்மிரல் செங் சிறிலங்காவுக்கு வந்தது தனியே வணிக நோக்கத்துக்காக அல்ல. சீனப் பேரரசின் கீழ் உலக ஒழுங்கைக் கொண்டு வரும் நேரடி இராணுவத் தலையீட்டுக்காகவே அவர் அந்தப் பயணத்தை மேற்கொண்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“சிறிலங்காவில் சீன நிறுவனங்களைப் போல சமமான முறையில் இந்திய நிறுவனங்கள் நடத்தப்படுவதில்லை. இந்திய நிறுவனங்கள் சுற்றுச்சூழல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக பல்வேறு தடைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

ஆனால் இந்திய நிறுவனங்களைப் போல சீன நிறுவனங்களுக்கு அத்தகைய தடைகள் இருப்பதில்லை.

சீனா தனது பட்டுப்பாதையை மீளக் கட்டுவதற்கு கோருகிறது. இந்தியா, இந்தியப் பெருங்கடலில் தனது பங்கை மீள வலியுறுத்துகிறது. இரண்டு நாடுகளுமே சிறிலங்கா தமக்கு முக்கியமான நாடு என்றும், மூலோபாய கூட்டாளியாக தமது பக்கம் நிற்க வேண்டும் என்றும் விரும்புகின்றன.

தமிழ்நாட்டு மக்களுடன் உள்ள நெருங்கிய உறவுகளுக்கு அப்பால், இந்தியாவும் சிறிலங்காவும் பலமான பொருளாதார, வர்த்தக உறவகளைக்  கொண்டுள்ள நாடுகள். சீனாவுடனான உறவுகள் எப்போதுமே இருமுனைகளைக் கொண்ட வாள் போன்றே உள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆர்வம், பல நூற்றாண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட எமது சொந்த வரலாற்று இணைப்புகள் மற்றும் கலாசார உறவுகளை கீழறுத்து விடும் என்ற கவலைகள் உள்ளன.

Shashi Tharoor

சீன அட்மிரல் செங் காலியில் அமைத்துள்ள சீன, பேர்சியன், தமிழ் மொழிகளிலான கல்வெட்டில், வணிகம் மற்றும் வர்த்தகம் மூலம் தாம் உருவாக்கும் அமைதியான உலகத்துக்கு இந்துக் கடவுள்கள் உதவி அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அட்மிரல் செங் இந்தோனேசியா, மலேசியா, சிறிலங்கா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு,  இராணுவத்தை பயன்படுத்துவது தொடர்பாகவே பயணங்களை மேற்கொண்டிருந்தார். அவர்  நட்பு ஆட்சியாளர்களையும் மூலோபாய வணிக கேந்திரங்களையும் கட்டுப்படுத்தினார்.

சிறிலங்காவிலும், இந்தோனேசியாவிலும் பரம்பரை அரசியலில் தலையீடு செய்தார். கண்டியிலும் ஏனைய இடங்களிலும் உள்ளூர் ஆட்சியாளர்களை கடத்தினார், படுகொலை செய்தார். கலாசார மற்றும் அரசியல் இறைமையின் சின்னமான புத்தர் பயன்படுத்திய பொருளையும் கைப்பற்றினார்.

இவை வணிக மற்றும் வர்த்தகத்தை உருவாக்கும் முயற்சிகள் அல்ல. சீனப் பேரரசின் கீழ் உலக ஒழங்கைக் கொண்டு வருவதற்காக அவர்களின் அரசியல் விவகாரங்களில் செய்யப்பட்ட நேரடித் தலையீடாகும்.

பாகிஸ்தான், சிறிலங்கா, மியான்மார் போன்ற இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் சீனாவின் முதலீடுகளும் பலமும் அதிகரித்து வருகிறது.  சில குறிப்பிட்ட நாடுகள், மாற்று பாதுகாப்பு வழங்குனராக  இந்தியாவை பார்க்கின்றன.

இந்தியா மென்சக்தியாகவே அறியப்பட்ட போதிலும், பிராந்தியத்தில்  இராணுவ வலிமை பெற்ற நாடாகவும் உள்ளது.

சீனாவுடன் போட்டியிடும் போது, இந்தியா தனது வணிகம் மற்றும் வர்த்தகத்தில் உள்ள பலவீனங்களை ஈடு செய்வது முக்கியமானது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *