மேலும்

நாளை மறுநாள் யாழ். வரும் ஐ.நா பொதுச்செயலர் – விக்னேஸ்வரனை தனியாக சந்திக்கமாட்டார்

ban-ki-moonநாளை மறுநாள் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தனியாகச் சந்தித்துப் பேசமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை மறுநாள் – ஓகஸ்ட் 31ஆம் நாள் மாலையில் கொழும்பு வந்து சேரும் ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன், மறுநாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

அத்துடன் காலியில் நடைபெறும் இளைஞர் மாநாடு ஒன்றிலும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் பங்கேற்கவுள்ளார்.

இதையடுத்து, வரும் செப்ரெம்பர் 2ஆம் நாள் யாழ்ப்பாணம் செல்லும், ஐ.நா பொதுச்செயலர், வலி.வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடவுள்ளார்.

அத்துடன் வடக்கு மாகாண ஆளுனரையும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் ஐ.நா பொதுச்செயலர் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.

எனினும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், ஐ.நா பொதுச்செயலருக்கும் இடையில் தனியான சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படவில்லை என்று தெரிய வருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவில் வடமாகாண முதலமைச்சரும், ஐ.நா பொதுச்செயலரைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

அதேவேளை, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியும், நிரந்தர அரசியல் தீர்வும் கிடைக்கும்வரை ஐ.நாவின்  பங்களிப்புத் தொடரவேண்டும் என்று பான் கீ  மூனிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தும் என்று, கூட்டமைப்பின் பேச்சாளர்  எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் ஐ.நா. எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பான் கீ  மூனிடம் நேரில் நன்றி தெரிவிக்கவுள்ளோம்.

அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசுக்குத் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்குமாறும் அவரிடம் எடுத்துரைக்கவுள்ளோம்.

இராணுவ ஆக்கிரமிப்பினால் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளையும் ஐ.நா. செயலரிடம் எடுத்துக் கூறுவோம்.

காணிகள் விடுவிப்பு, மீள்குடியேற்றம் என்பன துரிதகதியில் இடம்பெறவேண்டும் எனவும் அவரிடம் வலியுறுத்தவுள்ளோம்.

காணாமல்போனோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பிலும் அவரிடம் எடுத்துரைப்போம்.

போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியும், நிரந்தர அரசியல் தீர்வும் கிடைக்கும்வரை ஐ.நாவின் பங்களிப்புத் தொடரவேண்டும் என்றும், வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு ஐ.நா. தொடர்ந்தும் உதவிகளை வழங்கவேண்டும் எனவும் பான் கீ மூனிடம் வலியுறுத்தவுள்ளோம்”  என்று குறிப்பிட்டார்.

சிறிலங்காவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு எதிர்வரும் செப்ரெம்பர் 2ஆம் நாள் மாலையில், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்வார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *