மேலும்

சம்பந்தன் மீது ஒலிவாங்கியை வீசித் தாக்கவில்லை – அன்ரனி ஜெகநாதன்

antony-jeganathanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தான் தாக்கவில்லை என்று வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார். வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“வவுனியாவில் நடைபெற்ற தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  தேசிய பட்டியல் ஆசனத்தை சாந்தி சிறிஸ்கந்தராசாவுக்கு வழங்கியமை தொடர்பாக நான் கடுமையான வாதத்தை முன் வைத்தேன்.

இதனால் கடுமையான கருத்து மோதல் இடம்பெற்றது.  ஒரு கட்டத்தில் நான் கோபமாக ஒலிவாங்கியை  மேசை மீது வைக்கும் போது அது கீழே விழுந்து விட்டது.

அதனை சில  ஊடகங்கள் நான், இரா. சம்பந்தன் மீது ஒலிவாங்கியை வீசித் தாக்கினேன். அவர் மயிரிழையில் உயிர் தப்பினார் என செய்தி வெளியிட்டுள்ளன.  அது முற்றிலும் பொய்.

எனது கட்சிக்குள் நான் கருத்து மோதலில் ஈடுபடுவேன். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மீது  ஒலிவாங்கியை வீசி தாக்குகின்ற அளவுக்கு நான் செல்லவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் முன்பாக யாருமே கை நீட்டிப் பேசமாட்டார்கள். அவ்வாறு இருக்கையில் நான் எவ்வாறு ஒலிவாங்கியை வீசித் தாக்குவேன்,? என்று குறிப்பிட்டார்.

வவுனியா கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது அன்ரனி ஜெகநாதன் ஒலிவாங்கியை வீசித் தாக்கியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் மொழியாக்கம் புதினப்பலகையிலும் வெளியாகியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *