மேலும்

காணாமற்போனோர் பணியகம் கொழும்பிலேயே செயற்படும்

sri-lanka-emblemகாணாமற்போனோர் பணியக சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்திட்ட பின்னர், இந்தப் பணியகத்துக்கான ஏழு உறுப்பினர்களை அரசியலமைப்புச் சபை பரிந்துரைக்கும் என்று சிறிலங்கா அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த வாரங்களில் காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்குவதற்கான பணிகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அரசியலமைப்பு சபை தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்த 15 நாட்களுக்குள் சிறிலங்கா அதிபர்,  காணாமற்போனோர் பணியகத்தின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை நியமிப்பார்.

நியமனங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும். சபாநாயகரின் கையொப்பத்துக்காக காத்திருக்கிறோம். இந்தப் பணியகம் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே செயற்படத் தொடங்கும். பணியகத்தின் உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாக இருக்கும்.

எல்லா இனத்தவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஏழு உறுப்பினர்கள் இந்தப் பணியகத்துக்கு நியமிக்கப்படுவர்.

காணாமற்போனோர் பணியகத்தின் தலைமையகம் கொழும்பிலேயே இயங்கும். இந்த பணியகத்தின் ஆணையை நிறைவேற்றுவதற்குத் தேவைப்பட்டால், பிராந்திய பணியகங்களை அமைக்க சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.

இதன் உறுப்பினர்களாக இருப்பவர்கள்  உண்மை கண்டறிவதில், விசாரணைகளை மேற்கொள்வதில், மனித உரிமைச் சட்டங்களில், அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்களில் அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *