மேலும்

மிக் ஆவணங்கள் காணாமற்போனமை குறித்து முன்னாள் விமானப்படைத் தளபதிகளிடம் விசாரணை

MIG-27மிக்-27 போர் விமானங்களின் கொள்வனவு தொடர்பான மூல ஆவணம் காணாமற்போனமை குறித்து, 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதவியில் இருந்த முன்னாள் விமானப்படைத் தளபதிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

2005ஆம் ஆண்டு மிக் -27 போர் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் முறைகேடுகள் இடம்பெற்றது தொடர்பாக கொழும்பு கோட்டே நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த முறைகேடு குறித்து நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் மிக் போர் விமானக் கொள்வனவு தொடர்பான மூல ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா விமானப்படைக்கு கடந்த ஜூன் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும், மிக்-27 போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டது தொடர்பான மூல ஆவணங்கள் காணாமற்போய் விட்டதாக சிறிலங்கா விமானப்படை சார்பில் முன்னிலையான சட்ட அதிகாரி கடந்த ஜூலை 27ஆம் நாள் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தினார்.

இதுகுறித்து விசாரிக்க விமானப்படை விசாரணை நீதிமன்றம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், கடந்த 8ஆம் நாள் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கோட்டே நீதிவான், மிக் விமானக் கொள்வனவு குறித்த மூல ஆவணங்கள் எவ்வாறு காணாமற்போயின என்பது தொடர்பாக நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

ஆவணங்களை மறைத்து, இந்த விசாரணைகளைக் குழப்ப எவர் நடவடிக்கை எடுத்திருந்தாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிவான் பணித்துள்ளார்.

இதனிடையே, மிக் கொள்வனவு ஆவணங்கள் காணாமற்போனமை தொடர்பாக, சிறிலங்கா விமானப்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ளார்..

இந்த முறைகேடு குறித்து ரவி வைத்தியாலங்கார தலைமையிலான நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, விசாரித்து வருகிறது.

இந்த விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் ககன் புலத்சிங்களவிடம், ரவி வைத்தியாலங்கார கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *