மேலும்

முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த தயார்- சிறிலங்கா அரசு

rajitha senaratneபோரின் முடிவில் சரணடைந்த முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் அல்லது புனர்வாழ்வு அளிக்கப்பட்ட காலத்தில், உடல் ரீதியாக அவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தால், அதுகுறித்த மருத்துவ பரிசோதனைகளை நடத்த தயாராக இருப்பதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நல்லிணக்கப் பொறிமுறைக்கான ஆலோசனைச் செயலணி வடக்கில் நடத்தி வரும் அமர்வில், பங்கேற்ற முன்னாள் போராளி ஒருவர், தடுப்பில் இருந்த போது ஊசி ஏற்றப்பட்டதையடுத்து, தனது உடல் வலுக் குன்றியிருப்பதாகவும், அனைத்துலக மருத்துவ நிபுணர்களைக் கொண்டு முன்னாள் போராளிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இதுகுறித்து கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, ‘இது தொடர்பாக முறைப்பாடு முன்வைக்கப்பட்டால் முன்னாள் போராளிகளுக்கு உடற்பரிசோதனை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆனால் இது வரை எமக்கு அவ்வாறான எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை. முறைப்பாடு வந்தால் நாம் பரிசோதனை செய்வோம்.

இலங்கையில் அனைத்துலக தரம்வாய்ந்த மருத்துவர்கள் இருக்கின்றனர்.  எனவே இங்கு பரிசோதனை நடத்தலாம்.

ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளாக இவர்கள் எங்கே இருந்தனர். ஏன் இதனை வெளியில் கூறவில்லை என்ற கேள்வி எழுகின்றது.

தற்போதுதான் வெளியில் கூறுகின்றனர். அப்படியிருந்தும் நாங்கள் பரிசோதனை நடத்துவோம் என்று குறிப்பிட்டார்.

அதேவேளை, இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர, தடுப்பில் இருந்த முன்னாள் போராளிகளின் உடல் வலுவைப் பாதிக்கச் செய்யும் ஊசி போடப்பட்டதாக கூறப்படும்  குற்றச்சாட்டை நிராகரித்தார்.

“இந்த குற்றச்சாட்டை முழுமையாக இலங்கை இராணுவம் மறுக்கிறது.

சிறிலங்கா பௌத்தத்தை பிரதானமாகவும் ஏனைய மதங்களை முக்கியமானதாகவும் மதிக்கின்ற பின்பற்றுகின்ற ஒருநாடு.

இந்நிலையில் நாங்கள் இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கிறோம். மறுக்கிறோம்.

சிறிலங்கா இராணுவம் ஒரு மிருகத்திற்குக் கூட விசத்தைக் கொடுத்ததில்லை” என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *