மேலும்

சிறிலங்கா, மியான்மார் தேர்தல்களும் அமெரிக்காவின் எதிர்பார்ப்பும் – அட்மிரல் டெனிஸ் பிளேயர்

eagle-flag-usaசிறிலங்கா மற்றும் மியான்மார் ஆகிய இரண்டு ஆசிய நாடுகளிலும் வரும் மாதங்களில் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களின் பெறுபேறுகள் ஆசியப் பிராந்தியத்திற்கும் உலகிற்கும் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும்.

இவ்வாறு அமெரிக்க கடற்படையின் ஓய்வுபெற்ற தளபதியான அட்மிரல் டெனிஸ் சி பிளேயர்* எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். Pakistan observer நாளிதழ் வெளியிட்டுள்ள இந்தக் கட்டுரையை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

உலக வரைபடத்தில் சிறிலங்காவை அல்லது மியான்மாரை பெரும்பாலான அமெரிக்கர்களால் இலகுவாகக் கண்டுபிடிக்க முடியாத போதிலும்,  மிகமுக்கிய மற்றும் நிச்சயமற்ற வெளிப்பாடுகளுடன் கூடிய மிகப் பாரிய அரசியல் மாற்றங்கள் இடம்பெறுகின்ற இரு ஆசிய நாடுகளாக இவை காணப்படுகின்றன.

கடந்த ஜனவரியில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக சிறிலங்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுமா அல்லது இல்லையா என்பது ஆகஸ்ட் 17ல் இடம்பெறவுள்ள சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலிலேயே தங்கியுள்ளது.

இதற்கு மூன்று மாதங்களின் பின்னர் நவம்பர் 08ல் மியான்மாரில் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆங் சான் சூயியினுடைய கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் மியான்மாரில் தற்போது நிலவும் இராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே சிறிலங்கா மற்றும் மியான்மார் ஆகிய இரண்டு ஆசிய நாடுகளிலும் வரும் மாதங்களில் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்கள் இவ்விரு நாடுகளின் அரசியல் மாற்றங்களுக்கு மிக முக்கிய திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு நாடுகளிலும் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களின் பெறுபேறுகள் ஆசியப் பிராந்தியத்திற்கும் உலகிற்கும் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும்.

ஆசியப் பிராந்தியமானது துரித வளர்ச்சியை எட்டிவரும் நிலையில், சிறிலங்கா மற்றும் மியான்மார் ஆகிய இரண்டு நாடுகளும் தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவிற்கான பிரதான போக்குவரத்து மையங்களாக மாறிவருகின்றன.

அரசியல் என்பதற்கு அப்பால் இவ்விரு நாடுகள் மீதும் இலாபகரமான அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இவ்விரு நாடுகளினதும் ஆண்டிற்கான மொத்தத் தேசிய உற்பத்தி ஆறு சதவீதத்திற்கும் அதிகமானதாகும்.

இதேவேளையில் இவ்விரு நாடுகளும் ஜனநாயக நாடுகளாகும். அத்துடன் இவற்றின் எதிர்கால நலன் கருதி திறந்த சந்தை வாய்ப்புக்களும் அதிகம் காணப்படுகின்றன. அதிகாரத்துவம் மற்றும் மத்திய மயப்படுத்தப்பட்ட பொருளாதார முறைமைகள் இவ்விரு நாடுகளிலும் அதிகாரம் வாய்ந்தனவாக உள்ளன.

பத்து ஆண்டுகளாக சிறிலங்காவை மகிந்த ராஜபக்ச ஆட்சி செய்திருந்தார். 2009ல் இவரது இராணுவப் படைகள் நீண்டகாலம் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரை முடிவிற்குக் கொண்டு வந்தன.

சிறிலங்கா அரசாங்கம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பல ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தே போர் வெற்றியைத் தனதாக்கியது. ஆனால் இது தொடர்பான எவ்வித குற்றச்சாட்டுக்களும் இதுவரையில் விசாரணை செய்யப்படவில்லை.

அத்துடன் ராஜபக்ச தனது நிறைவேற்று அதிபர் ஆட்சி முறைமையில் மேலும் மேலும் தனக்கான அதிகாரங்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டாரே ஒழிய நாட்டு மக்களுக்கிடையில் மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கான எவ்வித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை.

இதற்கு மாறாக தனது குடும்பத்தினரை அரசாங்கத்திற்குள் உள்வாங்கி சுகபோக வாழ்வை வாழ்வதற்கு தூண்டுகோலாக இருந்தார். இதுமட்டுமல்லாது ராஜபக்சவின் பாதுகாப்புப் படையினர் தமிழ் சிறுபான்மையினரை சித்திரவதைகள், தாக்குதல்களுக்கு உள்ளாக்கியதுடன் அவர்களைக் கொலை செய்தனர்.

மூன்றாவது தடவையாகவும் சிறிலங்காவின் அதிபராகப் பதவி வகிப்பதற்கு ராஜபக்ச முயற்சி எடுத்தார். இதற்காக இவர் தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு முதலே கடந்த ஜனவரியில் அதிபர் தேர்தலை நடத்தினார். ஆனால் எதிர்பார்ப்பிற்கு மாறாக இத்தேர்தலில் சிறிசேன வெற்றியீட்டி நாட்டின் அதிபரானார்.

இதன்பின்னர் சிறிசேன நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை முன்னெடுத்துள்ளார். ஜனநாயக ஆட்சியைச் சமப்படுத்துவதற்கான முயற்சியில் சிறிசேன ஈடுபட்டுள்ளார். தனது சீர்திருத்தங்களை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காக நாடாளுமன்றத் தேர்தலை மேற்கொள்வதற்கான அறிவிப்பை சிறிசேன வெளியிட்டுள்ளார்.

ராஜபக்சவும் அவரது ஆதரவாளர்களும் சிறிசேன மீதும் அவரது அரசியல் கோட்பாடுகள் மீதும் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர். இதன்மூலம் மீண்டும் சிறிலங்காவின் அரசியலில் உள்நுழைந்து தமது அதிகாரத்துவ ஆட்சியையும் ஏமாற்றுத்தனமான அரசியலையும் முன்னெடுப்பதற்கான முயற்சிகளை ராஜபக்சவும் அவரது கூட்டாளிகளும் முன்னெடுக்கின்றனர்.

மியான்மாரில் நீண்டகாலமாக இராணுவ அதிகார ஆட்சி இடம்பெறுகிறது. இந்த ஆட்சியாளர்கள் தற்போது நாட்டை ஜனநாயக வழிக்குக் கொண்டு செல்லத் தீர்மானித்துள்ளனர். இதற்காகவே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

2010ல் ஆங் சாங் சூயி வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். மியான்மாரின் அதிபர் தெய்ன் செய்னின் கீழ் பணியாற்றிய இராணுவ ஜெனரல்கள் சீருடையை களைந்து விட்டு அரசாங்க அமைச்சர்களாகவும் அரசியல்வாதிகளாகவும் மாறினர்.

மியான்மாரில் வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள தேர்தலில் இராணுவ அதிகாரம்மிக்க தற்போதைய ஆளும்கட்சி, ஆங் சாங் சூயி தலைமையிலான பிரதான எதிர்க்கட்சி, நாட்டின் சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் பங்கேற்கவுள்ளன.

அறுபது ஆண்டுகளாக மியான்மாரில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றதைத் தொடர்ந்து மியான்மாரின் தற்போதைய அரசாங்கத்தால் சிறுபான்மையினருடன் யுத்த நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு சமரசத் தீர்வு எட்டப்பட்டுள்ளது. இந்த சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடவுள்ளன.

மியான்மாரின் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. மியான்மார் மீண்டும் இராணுவ ஆட்சிக்குள் செல்வதற்கான வாய்ப்புக் குறைவாகவே உள்ளன.

துரித வளர்ச்சி மற்றும் ஜனநாயக மறுமலர்ச்சியை நீட்டித்தல் ஆகியன மிக முக்கிய கேள்விகளாக உள்ளன. இராணுவத் தலைமையானது நாட்டில் நிலைத்தன்மையை ஏற்படுத்த விரும்புகிறது. ஆனால் நிலைத்தன்மையானது நாட்டில் இடம்பெறும் தவறுகளுக்கு மன்னிப்பு வழங்குவதாகவும் ஆட்சிக் கைமாற்றத்தைத் தடுப்பதாகவும் அமைந்துள்ளது.

மியான்மாரின் இராணுவப் படையினர் சட்டசபையில் தமது ஆசனங்களையும் தமது வர்த்தக சார் நலன்களையும் விட்டுக் கொடுக்க முன்வரவேண்டும். இதுவே நாட்டில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் அரசாங்கம் சிறந்த முறையில் ஆட்சியமைப்பதற்கு பங்களிக்கும்.

ஜனநாயகப் படைகள் சிறிலங்காவினதும் மியான்மாரினதும் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளன. இவ்விரு நாடுகளிலும் நடைபெறவுள்ள தேர்தல் பெறுபேறுகளே இவற்றுக்கு மிக முக்கியமானதாகும். இவ்விரு நாடுகளிலும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் இடம்பெற வேண்டும். இதுவே  மிகவும் அடிப்படையான ஒன்றாகும்.

பல்வேறு அரசியற் கட்சிகளினதும் தலைவர்களின் வாக்குறுதிகளும் உடன்படிக்கைகளும் இவ்விரு நாடுகளினதும் அடுத்த கட்ட ஜனநாயக ஆட்சிச் சீர்திருத்தத்தைத் துரிதப்படுத்தி வடிவமைப்பதற்கு வழிவகுக்கும்.

ஏனைய உலக நாடுகள் மியான்மாரினதும் சிறிலங்காவினதும் குறுகிய மற்றும் நீண்டகால எதிர்காலச் செயற்பாடுகனில் செல்வாக்குச் செலுத்தும். இவ்விரு நாடுகளிலும் சீனா அதிகளவில் செல்வாக்குச் செலுத்துகிறது.

சிறிலங்காவின் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் தரித்து நின்றுள்ளமையானது சிறிலங்காவின் பொருளாதார மற்றும் இராணுவ முன்னெடுப்புக்களில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளமையை எடுத்துக் காட்டுகிறது.

இதேபோன்று மியான்மாரில் சீனா தனது இராணுவப் பயிற்சிகளை வழங்குவதுடன் ஆயுத விற்பனைகளிலும் ஈடுபடுகிறது. சீனாவின் பொருளாதார முதலீடுகள் வரவேற்கப்படுகின்ற போதிலும், சிறிலங்கா மற்றும் மியான்மாரில் சீனாவால் முன்னெடுக்கப்படும் இராணுவ சார் திட்டங்கள் இவற்றின் ஜனநாயக ஆட்சியைக் கேள்விக்குறியாக்குகின்றன.

அமெரிக்காவைப் போலல்லாது, யப்பான் இவ்விரு நாடுகள் மீதும் எவ்வித தடைகளையும் விதிக்கவில்லை. ஆனால் இவ்விரு நாடுகளினதும் அடிக்கட்டுமான மற்றும் பயிற்சித் திட்டங்களுக்காக யப்பான் பல ஆண்டுகளாக முதலீடு செய்துள்ளது. யப்பான் ஜனநாயகச் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கிறது.

ஆனால் நிபந்தனையற்ற அல்லது அதிக அழுத்தம் வழங்கப்படாத நீண்ட கால உதவிகள் நிச்சயம் இரு நாடுகளினதும் ஜனநாயக ஆட்சியை வலுப்படுத்தும். இந்த வகையில், யப்பானின் உதவிகள் வரவேற்கத்தக்கதாகும்.

யப்பானின் முதலீடுகள் சிறிலங்கா மற்றும் மியான்மாரின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. எடுத்துக்காட்டாக, மியான்மாரின் நல்லாட்சியை வலுப்படுத்துவதற்கான அதன் அமைச்சர்களுக்கு யப்பானின் 50 ஆலோசகர்கள் வழிகாட்டுகின்றனர்.

இது தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?

மியான்மாரில் அமெரிக்கா பல்வேறு செயற்பாடுகளை தனிப்பட்ட ரீதியாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்கிறது. மியான்மாருக்கு அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் பயணம் செய்கின்றனர். அமெரிக்க அதிபரும் கூட மியான்மாருக்கான தனது அரச முறைப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க அரசாங்கமானது மியான்மாரில் சில தடைகளை மேலும் நீடிப்பதற்கு தனது ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. மியான்மாரின் தேர்தல் பெறுபேறுகள் மற்றும் சிறுபான்மையினருடனான யுத்தநிறுத்த உடன்படிக்கையின் விளைவுகளைக் கருத்திற் கொண்டே மேலும் மியான்மாரில் தனது முதலீடுகளை மேற்கொள்வதென்பதில் அமெரிக்கா தெளிவாக உள்ளது.

அமெரிக்காவுடன் முழுமையான சாதாரணமான உறவுகளைக் கட்டியெழுப்ப மியான்மார் அரசாங்கம் விரும்புகிறது. ஆனால் இது சுலபமான காரியமல்ல. இதற்காக மியான்மார் அரசாங்கம் தனது நாட்டில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்கான நகர்வுகளை முன்னெடுப்பதுடன், சிறுபான்மை சமூகத்தினருடனான நீண்டகால உள்நாட்டுப் போரை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

சிறிலங்கா மீதான அமெரிக்காவின் நிலைப்பாடு எத்தகையது?

ராஜபக்சவின் அதிகாரத்துவ ஆட்சி நிறைவுக்கு வரவேண்டும் என்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த எதிர்பார்ப்பிற்கு அமைய சிறிசேன சிறிலங்காவின் அதிபராக வெற்றியீட்டினார்.

இதன் பின்னர் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் ஹெரி கடந்த மே மாதம் சிறிலங்காவுக்கான தனது வரலாற்று முக்கியத்துவம் மிக்க பயணத்தை மேற்கொண்டார்.

சிறிலங்காவில் ஜனநாயகச் செயற்பாடுகள் தொடரப்பட வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. அத்துடன் உள்நாட்டுப் போரின் இறுதியில் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் வகைகூற வேண்டும் என்பதிலும் அமெரிக்கா அழுத்தம் வழங்கியுள்ளது.

அமெரிக்கா தனது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக முதலீடுகளை வழங்குவதுடன் நல்லுறவைப் பேண வேண்டும் என்பது சிறிலங்காவின் விருப்பாகும். எனினும் மியான்மாரின் நகர்வுகள் அதிகளவில் அதன் உள்நாட்டுக் காரணிகளிலும் அவற்றின் தீர்மானங்களிலுமே அதிகம் தங்கியுள்ளன.

ஆகவே மியான்மாரின் எதிர்கால வளர்ச்சி மீது வெளித்தரப்பினரின் அழுத்தம் மற்றும் உந்துதல் என்பதற்கு அப்பால் இதன் உள்நாட்டு சக்திகளின் தீர்மானமே அதிகளவில் செல்வாக்குச் செலுத்துகிறது.

பொருளாதாரத் தடைகளைக் கையாளுதல், சிறந்த எதிர்கால உறவுநிலை தொடர்பில் வாக்குறுதி வழங்குதல் ஆகியவற்றையே மியான்மார் மற்றும் சிறிலங்காவிடமிருந்து அமெரிக்கா எதிர்பார்க்கிறது. இத்தகைய அமெரிக்காவின் வெளியுறவுக் கோட்பாடு பயனுள்ளதாக அமையும்.

ஆனால் சிறிலங்காவில் அல்லது மியான்மாரில் அண்மையில் ஏற்பட்டுள்ள சாதகமான மாற்றங்கள் அமெரிக்காவின் கோட்பாட்டில் மிக முக்கிய இடம் வகிக்காவிட்டாலும் தேர்தல் பெறுபேறுகள் அதிக செல்வாக்கைச் செலுத்தும்.

மக்களுக்கான சுதந்திரம், பொருளாதார வாய்ப்புக்கள் மற்றும் தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படும் தலைவர்கள் போன்றன சிறிலங்கா மற்றும் மியான்மாரின் சாதகமான எதிர்காலத்தை அடைவதற்கு செல்வாக்குச் செலுத்தும்.

அண்மையில் இவ்விரு நாடுகளிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மக்களின் எதிர்பார்ப்புக்கள் என்ன என்பதை தெளிவாக வெளிப்படுத்துகின்றன. இவ்விரு நாடுகளிலும் உள்ள துணிச்சலுள்ள ஆண் மற்றும் பெண்கள் சாதனைகளை அடைவதற்காக ஆபத்துக்களை எதிர்நோக்குவதுடன் கடினமாக உழைக்கின்றனர்.

ஏற்கனவே இவ்வாறான சாதனைகளை அடைந்து வளமான வாழ்வை அனுபவிக்கும் அமெரிக்கர்களாகிய நாங்கள் மியான்மார் மற்றும் சிறிலங்கா வாழ் மக்களுக்கு ஆதரவு வழங்கி அவர்களுக்கு உத்வேகத்தை வழங்குவோம்.Admiral Dennis C. Blair

*அட்மிரல் டெனிஸ் சி பிளேயர் – அமெரிக்க கடற்படையின் பசுபிக் பிராந்திய முன்னாள் தளபதி, அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *