மேலும்

சிறிலங்கா- சீன பாதுகாப்பு உயர்மட்டக் குழுக்கள் சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சு

Chinese-srilanka-defence-delegations (2)சிறிலங்கா- சீன பாதுகாப்பு உயர்மட்டக் குழுக்கள் நேற்று சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளன. சங்கிரி லா கலந்துரையாடல் எனப்படும், 14வது ஆசிய பாதுகாப்பு மாநாட்டின் பக்க நிகழ்வாகவே இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சந்திப்பில் பங்கேற்ற சிறிலங்கா குழுவுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தலைமை தாங்கினார்.

சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்க, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மற்றும் கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் தலைமை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளும் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

சீன பாதுகாப்புக் குழுவுக்கு, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரதி தலைமை அதிகாரி அட்மிரல் சன் ஜியான்கூ தலைமை தாங்கினார்.

Chinese-srilanka-defence-delegations (1)

Chinese-srilanka-defence-delegations (2)

Chinese-srilanka-defence-delegations (3)

இந்தச் சந்திப்பின் போது,  இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கும் என்று, அண்மையில் சீனா சென்றிருந்த போது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்ததை ருவான் விஜேவர்த்தன சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சிறிலங்காவுக்கு சீனா வழங்கும் பயிற்சி மற்றும் ஏனைய உதவிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நட்புறவு நிலவுவதை சுட்டிக்காட்டிய சீனத் தளபதி அட்மிரல் சன் ஜியான்கூ, பாதுகாப்பு விடயங்கள் உள்ளிட்ட உதவிகளை சிறிலங்காவுக்கு சீனா தொடர்ந்தும் வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாதுகாப்புக் கலந்துரையாடல், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கியமானதொரு பொறிமுறை என்பதை இருதரப்புகளும் ஏற்றுக் கொண்டன.

இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள இரண்டாவது சீன- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடலுக்கு சீனத் தரப்புக்கு, ருவான் விஜேவர்த்தன அழைப்பு விடுத்தார் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.