மேலும்

வித்தியா படுகொலை விசாரணை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றம்

punkuduthivu-vithyaபுங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை, சிறிலங்கா காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.

வித்தியா படுகொலை விவகாரம், யாழ்ப்பாணத்தில் பெரும் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ள நிலையிலும், வடக்கு கிழக்கு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் அதற்கு எதிரான போராட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையிலும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சிறிலங்கா காவல்துறையினர் போதிய அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக தமிழ் மக்களாலும் அரசியல் தலைவர்களாலும் முன்வைக்கப்பட்டு வந்தது.

நேற்று இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து, இந்த விசாரணை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிறப்புப் பிரிவு ஒன்று யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விசாரணையை தனிப்பட்ட வகையில் மேற்பார்வை செய்யவும், நேற்று நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக ஆராயவும், சிறிலங்கா காவல்துறை மா அதிபர் இலங்ககோனும் யாழ்ப்பாணம் சென்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *