மேலும்

வித்தியா படுகொலைக்கு எதிரான போராட்டங்களால் கொந்தளிக்கிறது குடாநாடு

vithya-protest-jaffnaபுங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தப்பவிடும் முயற்சிகளைக் கண்டித்தும் நடத்தப்பட்ட போராட்டங்களால் யாழ்.குடாநாட்டில் இன்று பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வித்தியா படுகொலையை கண்டித்து இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, திருநெல்வேலி, கல்வியங்காடு, யாழ்.நகரப் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.

அத்துடன் யாழ்.நகரிலுள்ள பல பாடசாலைகளின் மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

அதேவேளை, வித்தியா கொலையை கண்டித்து, யாழ். நகரில் பேரணி ஒன்றும் நடத்தப்பட்டது.

இதன்போது யாழ்.காவல்நிலையத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டங்களால் யாழ். நகரப் பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டதுடன், பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து. யாழ். நகரப் பகுதியில், பெருமளவில் சிறப்பு அதிரடிப்படையினரும் கலகம் அடக்கும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

vithya-protest-jaffna (5)

vithya-protest-jaffna (6)

vithya-protest-jaffna (7)

vithya-protest-jaffna (4)

 

இதனிடையே, வித்தியா கொலையை கண்டித்து, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை வவுனியாவிலும் இன்று மாணவர்களாலும் பொது அமைப்புகளாலும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, நாளையும், யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் கடையடைப்பு போராட்டத்துக்கும், பாடசாலைப் புறக்கணிப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் நாளை போராட்டங்கள் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய 10வது சந்தேக நபர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முனைவதாகவும் அவரைக் கைது செய்யவும் கோரி, புங்குடுதீவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

vithya-protest-jaffna (3)

vithya-protest-jaffna (1)

vithya-protest-jaffna (2)

புங்குடுதீவில் நடந்த கூட்டம் ஒன்றுக்கு வந்திருந்த பிரபல சட்டவாளர் தமிழ்மாறனை பொதுமக்கள் முற்றுகையிட்டு, தடுத்து வைத்துள்ளனர்.

அவரே, குறிப்பிட்ட 10வது சந்தேக நபரை வெளிநாட்டுக்குத் தப்பிக்க வைக்க முனைவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்தநிலையில், சம்பவ இடத்துக்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் குருகுலராசா உள்ளிட்டோர் பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றனர்.

இந்தநிலையில், தாம் 10வது சந்தேக நபரை கொழும்பில் வைத்து கைது செய்துள்ளதாக, சிறிலங்கா காவல்துறையினர் உறுதியளித்துள்ள போதிலும், அவரை யாழ்ப்பாணம் கொண்டு வந்தாலே சட்டவாளரை விடுவிப்போம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் புங்குடுதீவில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், அங்கு பெருமளவில் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *