மேலும்

கோத்தா வழக்கின் தீர்ப்பினால் குழப்பத்தில் அரசாங்கம் – கொமன்வெல்த் உதவியை நாடுகிறார் ரணில்

Ranil-wickramasingheமுன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு மீதான நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக, கொமன்வெல்த் அமைப்பின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவுக்கு சாதகமான முறையில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சிறிலங்கா அரசாங்கத் தரப்பை குழப்பத்துக்குள்ளாக்கியுள்ளது.

வரும் ஒக்ரோபர் மாதம் வரை, கோத்தாபய ராஜபக்சவை கைது செய்ய உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையால், புதிய அரசாங்கம் மேற்கொண்டு வரும், நிதிக்குற்ற விசாரணைப் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இடைக்காலத் தீர்ப்பை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னைய அரசின் பிரமுகர்கள், தப்பிவிடும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக அரசதரப்புக் கவலையடைந்துள்ளது.

இந்தநிலையில், கொழும்பில் நேற்று நடந்த பொதுசன ஊடக சீர்திருத்தங்கள் தொடர்பான மாநாட்டில் உரையாற்றிய, சிறிலங்கா பிரதமர் ரதணில் விக்கிரமசிங்க, இது தொடர்பாக கொமன்வெல்த் அமைப்பின் ஆலோசனையை கோரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவை கைது செய்வதற்கு உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோத்தபாய ராஜபக்சவினால், அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் வழக்கைத் தாக்கல் செய்ய முடியும். அது ஜனநாயக உரிமையும் கூட.

அந்த விடயத்தை ஒரு போதும் கேள்விக்குட்படுத்த முடியாது. ஆனால் அரசியல் பழிவாங்கலை மையப்படுத்தி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அத்தீர்ப்புக்காக நீதிமன்றத்தினால் கேள்விக்குட்படுத்தும் அம்சங்கள் தொடர்பில் பதிலளிக்கும் பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது.

எனினும் இதுதொடர்பாக தெளிவுபடுத்துவதற்கு உயர்நீதிமன்றம் எமக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. சந்தர்ப்பம் வழங்கியிருந்தால் அரசாங்கத்தின் தரப்பின் வாதத்தை முன்வைத்திருக்க முடியும்.

இந்த வழக்கு ஒக்ரோபர் மாதம் வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அது வரைக்கும் எம்மால் பொறுத்திருக்க முடியாது.

குறித்த தீர்ப்பின் தோற்றத்தன்மை எவ்வாறானது என்பதனை அறிய வேண்டியுள்ளது.

உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் இடம்பெற்றுள்ளதா அல்லது நீதித்துறை பலப்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கான பதிலை அறிந்து கொள்வதற்கு ஆர்வமாக உள்ளேன்.

அதிபர் மைத்திரிபால சிறிசேன நாட்டின் தலைவர் மாத்திரமின்றி கொமன்வெல்த் அமைப்பின் தலைவராகவும் செயற்படுகிறார். ஆகையால் இவரது பெருமையை நாங்கள் பாதுகாக்க வேண்டியுள்ளது.

கொமன்வெல்த் அமைப்பின் கொள்கையை பாதுகாக்கும் வகையில் எங்களுடைய செயற்பாடுகள் அமைய வேண்டும்.

இதனால், இந்த தீர்ப்பு தொடர்பில் கொமன்வெல்த் அமைப்பின் நீதிமன்றத்தினூடாகவும் அதன் சட்ட அறிஞர்களின் மூலமாகவும் ஆலோசனையை பெற்று குறித்த வழக்கின் அடுத்த கட்ட நகர்வினை முன் நகர்த்தவுள்ளேன்.

இதனூடாக அனைத்துலகத்தை  நாடவில்லை. மாறாக ஆலோசனை மாத்திரமே பெறவுள்ளேன்.

செப்ரெம்பர் மாதம் புதிய நாடாராளுமன்றம் உருவாக்கப்படவுள்ளதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒக்ரோபர் மாதத்தின் பின்னர் குறித்த வழக்கிற்கு புதிதாக அமையும் அரசாங்கம் பதிலளிக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *