மேலும்

சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாக்கும் உலகின் முதல் நாடாகிறது சிறிலங்கா

mangrovesசதுப்புநிலக் காடுகளை முழுமையாகப் பாதுகாக்கும் உலகின் முதல் நாடாக சிறிலங்கா மாறவுள்ளது. இதற்கான திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் சதுப்பு நிலக்காடுகள் கணிசமாக அழிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைப் பாதுகாத்து மீள்நடுகை செய்யும் நோக்கில், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளிட்ட 15 ஆயிரம் பெண்களுக்கு, மாற்று வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நுண்கடன்கள் வழக்கப்படவுள்ளன.

இதன் மூலம் சதுப்பு நிலக் காடுகளை விறகுக்காக அழிக்கும், இவர்கள் அதனைத் தவிர்ப்பதுடன், சதுப்பு நிலத் தாவரங்களை மீள்நடுகை செய்து வருமானத்தை ஏற்படுத்திக் கொள்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் அரைப்பகுதி சதுப்பு நிலக்காடுகள் கடந்த நூற்றாண்டில் அழிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்காவில் உள்ள சதுப்பு நிலக்காடுகள் அனைத்தையும் பாதுகாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கத்தின் உதவியுடன் சுதேச என்ற அரச சார்பற்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தின் மூலம், சதுப்பு நிலக்காடுகள் பாதுகாக்கப்படுவதுடன், கரையோரப்பகுதி மக்களின் வாழ்க்கை நிலையும் உயரும் என்று நம்பப்படுகிறது.

இன்று அறிவிக்கப்பட்டுள்ள 2.2 மில்லியன் பவுண்ட்ஸ் திட்டத்தின் கீழ், 48 கடலேரிகளில் உள்ள 21,782 ஏக்கர் சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தப் பணியில் 15 ஆயிரம் பெண்கள் ஈடுபடவுள்ளனர். அவர்களால் மேலதிகமாக, 9600 ஏக்கரில் சதுப்பு நிலத் தாவரங்கள் மீள்நடுகை செய்யப்படவுள்ளன.

mangroves

சிறிலங்காவின் வடக்கு கிழக்கு பகுதிகளிலேயே அதிகளவு சதுப்பு நிலத் தாவரங்கள் காணப்படுவதுடன், அவற்றில் கணிசமானவை போர்க்காலங்களில் அழிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாற்றத்தின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் முக்கியமான இயற்கை வளமாக சதுப்பு நிலக்காடுகள் காணப்படுகின்றன.

ஏனைய காடுகளை விடவும். சதுப்பு நிலக்காடுகளால் ஐந்து மடங்கு காபன் உறிஞ்சப்படுகிறது.

அத்துடன், கரையோரப் பகுதிகளை இயற்கைச் சீற்றங்களான வெள்ளம், சுனாமி போன்றவற்றில் இருந்து பாதுகாக்கவும் உதவும் சதுப்பு நிலக்காடுகள்,  நண்டு,இறால் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கான களமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவின் போது, வடக்கு, கிழக்கில் பல இடங்களில் பாதிப்புகள் குறைவாக இருந்தமைக்கு சதுப்பு நிலக் காடுகளும் முக்கிய காணரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *