மேலும்

மைத்திரியிடம் 5 கோரிக்கைகளை முன்வைத்த மகிந்த

mahinda-maithriசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று நடத்திய பேச்சுக்களின் போது, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தரப்பினால், ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிறிலங்கா அதிபரின் செயலகத்தில் இன்று பிற்பகல் நடந்த இந்தக் கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை முன்னிறுத்த வேண்டும் என்பதே, மகிந்த தரப்பின் முக்கிய கோரிக்கையாக இருந்தது என்று கூறப்படுகிறது.

அத்துடன், மே 15ம் நாளுடன் உள்ளூராட்சி சபைகளைக் கலைக்க எடுக்கப்பட்டுள்ள முடிவை நிறுத்தி வைக்குமாறும் மகிந்த ராஜபக்ச தரப்புக் கோரியுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தனது கூட்டணிக் கட்சிகளுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட வேண்டும் என்பது மகிந்த தரப்பின் மூன்றாவது கோரிக்கையாகும்.

நாடாளுமன்றத் தேர்தலில், வேட்பாளர்களை நிறுத்துவது மற்றும், கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவது, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவைக் கலைப்பது ஆகியன மகிந்த தரப்பு முன்வைத்துள்ள ஏனைய கோரிக்கைகளாகும்.

எனினும், இந்தக் கோரிக்கைகள் எதற்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும், தொடர்ந்து பேசுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய பேச்சுக்களில் மைத்திரிபால சிறிசேனவுடன், ராஜித சேனாரத்ன, துமிந்த திசநாயக்க, எம்.கே.டி.எஸ்குணவர்த்தன, அனுர பிரியதர்சன யாப்பா, நிமால் சிறிபால டி சில்வா ஆகியோரும், மகிந்த ராஜபக்ச தரப்பில் ஜி.எல்.பீரிஸ்,குமார வெல்கம, மகிந்தானந்த அளுத்கமகே, பந்துல குணவர்த்தன, டலஸ் அழகப்பெரும ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *