மேலும்

ஜெனிவாவை எதிர்கொள்வதற்கான பாரிய காய்நகர்த்தலில் சிறிலங்கா

UNHRCவரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான பாரிய இராஜதந்திர முயற்சிகளில் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் இறங்கியுள்ளது.

இதற்கென பிரசெல்ஸ், வொசிங்டன், ஜெனிவா ஆகிய நகரங்களுக்கு சிறிலங்கா அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பயணம் மேற்கொள்கின்றனர்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றிரவு பிரசெல்ஸ் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவர் இந்த மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வந்துள்ள ஐரோப்பிய் ஒன்றியத்துக்கான மீன்பிடித் தடையை நீக்குவது குறித்த பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் மூத்த வெளிவிவகார ஆலோசகர் ஜயந்த தனபாலவும், பிரசெல்சில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் ஜயந்த தனபால நேற்று ஜெனிவாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவர் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேய்ன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் அதிகாரபூர்வமற்ற பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, ஜயந்த தனபால நாளை சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அடுத்த மாத முற்பகுதியில் அமெரிக்காவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

எனினும், வொசிங்டனில் அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி உள்ளிட்ட உயர்மட்ட  அதிகாரிகளுடனான சந்திப்பு அட்டவணை இன்னமும் இறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரியவருகிறது.

அதேவேளை, நேற்று பிரசெல்சுக்குப் பயணமாக முன்னர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கருத்து வெளியிடுகையில்,

“ ஜயந்த தனபாலவின் ஜெனிவா பயணத்தை அங்குள்ள அதிகாரிகளின் மனோநிலையை கண்டறிவதற்கான ஒரு பயணமாகவே கருத வேண்டும்.

ஜெனிவா தீர்மானம் தொடர்பாக அவர்கள் சிறிலங்காவின் தெரிவுகள் தொடர்பாக என்ன கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் முயற்சியில் அவர் ஈடுபடுவார்.

தனபாலவை உடனடியாக ஜெனிவாவுக்கு அனுப்பி, ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்திக்க வேண்டும் என்று நாம் உணர்ந்தோம்.

அடிப்படையில் இதனை நாம் அவர்களின் மனோநிலையை கண்டறிவதற்கான பயணம் என்றே அழைக்கலாம்.

இதில் எந்தப் பொறுப்பும் கிடையாது. ஆனால், நாம் ஐ.நாவுடனும், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கிய நாடுகளுடனும் பேசப் போகிறோம்.

உறுதியானதொரு திட்டத்தை் வரைய முன்னர், நாம்  பல்வேறு தெரிவுகளை எதிர்பார்க்கிறோம்.

அந்த திட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்” எனக் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *