மேலும்

புதிய கட்சி, கூட்டணி அமைக்கும் அழைப்பை நிராகரித்தார் மகிந்த

mahinda-rajapaksha-1தாம் புதியதொரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கவோ அல்லது புதிய அரசியல் கூட்டணி ஒன்றைத் துவங்கவோ போவதில்லை என்று சிறிலங்காவின்  முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் தோல்வியுற்றதையடுத்து. சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவை, கட்சியின் காப்பாளர் பதவியில் இருந்தும் நீக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், மகிந்த ராஜபக்சவை ஆட்சியில் அமர்த்துவதில் முக்கிய பங்காற்றிய, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணிக் கட்சிகள், மகிந்த ராஜபக்சவை புதிய அரசியல் கூட்டணி ஒன்றுக்குத் தலைமையேற்குமாறு வலியுறுத்தி வருகின்றன.

இதனால் அவர் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய பிரமுகர்களை மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சபாநாயகரின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதிய அரசியல் கூட்டணி ஒன்றுக்குத் தலைமையேற்று, பிரதமர் வேட்பாளராக களமிறங்குமாறு மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், அதற்கு மகிந்த ராஜபக்ச மறுத்து விட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக தாம் நாடு முழுவதும் சென்று பரப்புரை செய்வேன் என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தனது மகன் நாமல் ராஜபக்ச போட்டியிடுவார் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *