மேலும்

புதிய அரசாங்கம் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் – அமந்த பெரேரா

Amantha-perera-vanni (2)ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற தேர்தலின் போது வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 72 சதவீத வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்திருந்தமை நாட்டின் தற்போதைய புதிய அரசாங்கம் இந்த மக்களுக்கு உண்மையான மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதனை வலியுறுத்துகிறது.

இவ்வாறு ஐபிஎஸ் ஊடகத்துக்கான அமந்த பெரேரா எழுதியுள்ள செய்தி ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்காவில் தொடரப்பட்ட குருதி தோய்ந்த உள்நாட்டுப் போர் வெற்றி கொள்ளப்பட்ட ஆறாவது ஆண்டு நிறைவு நாளுக்கு இன்னமும் நான்கு மாதங்கள் உள்ளன.

மே19,2009 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் போரின் போது தோற்கடிக்கப்பட்டு சிறிலங்கா அரசாங்கப் படைகளால் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டது. இதன்பின்னர் ஒரு தலைமுறைக் காலம் வரை தொடரப்பட்ட யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

நாட்டின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் இயல்புநிலையை மீளவும் கொண்டு வந்துள்ள அதேவேளையில், நாட்டின் பொருளாதாரத்திலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இவ்வாறான அபிவிருத்திகள் மற்றும் மாற்றங்கள் போர்ப் பாதிப்பிற்கு உள்ளாகிய வன்னியில் இடம்பெறவில்லை.

Amantha-perera-vanni (4)

போர் முடிவடைவதற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆளப்பட்ட வடக்கு மாகாணத்தின் பெருநிலப்பரப்பான வன்னியில் போதியளவு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை.

‘சமாதானம் என்பது செழுமையை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால் இது எமக்குக் கிடைக்கவில்லை. நாங்கள் நாள்தோறும் எமது வாழ்வை நடத்திச் செல்வதற்குப் போராட வேண்டியுள்ளது’ என வடக்கு மாகாணத்தில் உள்ள பூநகரியைச் சேர்ந்த 18 வயதான கஜிதா சண்முகதாசன் தெரிவித்தார்.

பல மில்லியன் டொலர் பெறுமதியில் கட்டுமாணத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் இவை இளையோர்களுக்கான சிறந்த தொழில்வாய்ப்பைப் பெற்றுத் தரவில்லை என கஜிதா தெரிவித்தார்.

‘எமது இடத்தில் புதிய நெடுஞ்சாலைகள், புதிய தொடருந்துப் பாதைகள் போடப்பட்டுள்ள போதிலும் எமக்கென எவ்வித தொழில் வாய்ப்பும் வழங்கப்படவில்லை. ஐந்து ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்தும் துன்பப்படுகின்றனர். சமாதானம் நிலவும் போது இவ்வாறான துன்பங்களை நாங்கள் சந்திக்கக் கூடாது’ என இந்தப் பெண் மேலும் சுட்டிக்காட்டினார்.

Amantha-perera-vanni (1)

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் போர் இடம்பெற்ற காலத்திலும் அதற்குப் பின்னரான தற்போதைய காலப்பகுதியிலும் தேசிய பரீட்சைகளில் சிறப்புச் சித்திகளைப் பெற்றுள்ளனர்.

2013 இடம்பெற்ற பல்கலைக்கழகத் தெரிவுப் பரீட்சையின் போது, இதில் கலந்து கொண்டவர்களில் 63.8 சதவீதத்தினர் நாட்டின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் தமது உயர்கற்கையைத் தொடர்வதற்கான தகைமையைப் பெற்றிருந்தனர்.

ஆனால் இதே வடக்குப் பகுதி மாணவர்களுக்குத் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. பல்கலைக்கழகப் பட்டதாரிகள் கூட தமது கல்விக்கேற்ற தொழிலைப் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

சண்முகதாசன் போன்றவர்கள் கூட பல்கலைக்கழகங்களுக்கு  அப்பால் அல்லது தமது மாகாணத்திற்கு வெளியே சிறந்த தொழில் தேடிச் செல்லவேண்டிய நிலையிலுள்ளனர்.

இப்புதிய ஆண்டின் முதலாவது வாரத்தில் இடம்பெற்ற அதிபர் தேர்தலின் விளைவாகப் புதிய அதிபர் நியமனம் செய்யப்பட்டமை, ஜனவரி 14 அன்று பாப்பரசர் அவர்கள் போரால் பாதிக்கப்பட்ட முன்னாள் போர் வலயத்திற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டமை போன்றன வன்னியில் வாழும் மக்கள் மத்தியில் புதியதொரு நம்பிக்கையைத் துளிர்விடச் செய்துள்ளது.

Amantha-perera-vanni (3)

அதாவது போரின் போது பாதிக்கப்பட்ட தமது வாழ்வு இனிவருங் காலத்தில் முன்னேற்றப்படும் என வன்னியில் வாழும் சாதாரண பொதுமக்கள் நம்புகின்றனர்.

ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற தேர்தலின் போது வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 72 சதவீத வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்திருந்தமை நாட்டின் தற்போதைய புதிய அரசாங்கம் இந்த மக்களுக்கு உண்மையான மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதனை வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *