மேலும்

காணாமற்போன 2000 பேர் குறித்து அனைத்துலக சட்டங்களுக்கு அமைய விசாரணை

missingகாணாமற்போன 2000 பேர் குறித்து தீவிரமாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும், இவை தனியாக கோவைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவிக்கையில்,

“அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்களுக்கு அமைய விசாரிக்கப்பட வேண்டிய தனியானதொரு கோப்பு விசாரணைக்காக  தயார் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரிக்க நிபுணர் குழுவொன்று தேவைப்படும்.

சில விடயங்கள் அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்களுடன் தொடர்புடையவை. அந்த முறைப்பாடுகளைத் தனியாக விசாரிக்க வேண்டிய தேவை உள்ளது.

இது இறுதியான முறைப்பாடுகளின் தொகுப்பு அல்ல, அவை மேலும் விசாரிக்கப்பட வேண்டும்.

இன்னொரு விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டும் என்று முன்னைய அரசாங்கத்திடம் நாம் கூறியிருந்தோம்.

இதுபற்றி நாம் அதிபர் செயலகத்துக்கு தகவல் கொடுத்திருந்தோம். ஆனால் அங்கிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. ஒருவேளை நிதிப்பற்றாக்குறை காரணமாக இருந்திருக்கலாம்.

முறைப்பாடுகள் தொடர்பாக சான்றுகளை கண்டுபிடிக்க வேண்டும். நாம் பெறுகின்ற, சான்றுகளை தனியாக ஆவணப்படுத்த வேண்டும்.

இந்த விசாரணைக் கோப்பு, சேர் டெஸ்மன்ட் டி சில்வா மற்றும் பாகிஸ்தான், இந்திய நிபுணர்களின் ஆலோசனைப்படி திறக்கப்பட்டுள்ளது.

அவர்களுடன் ஒருமுறை சந்தித்துப் பேசியுள்ளோம். அவர்களின் ஆலோசனையை நாம் தொலைபேசி வழியாக பெற்றுக் கொள்கிறோம்.

அவர்கள், 2000 முறைப்பாடுகள் தொடர்பாக அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்களுக்கு அமைவாக விசாரிக்கப்பட வேண்டும் என்று வழிகாட்டியுள்ளனர்.

ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நீடிக்கப்பட்டு வருகிறது.

வரும் பெப்ரவரி 15ம் நாளுடன் ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிகிறது. புதிய அரசாங்கம் விசாரணைகளைத் தொடர விரும்பினால், இதன் பதவிக்காலத்தை நீடிக்க வேண்டும்.

இப்போது எமது பணி தொடர்பான சுருக்க அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளோம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சாட்சியங்களை உள்ளடக்கியதாக, முன்னேற்ற அறிக்கை ஒன்றை நாம் கையளிக்கவுள்ளோம்.

போரின்போது காணாமற்போன படையினர் தொடர்பாக செய்யப்பட்டுள்ள 5000 முறைப்பாடுகள் மீது நாம் இன்னமும் கை வைக்கவேயில்லை.

போரில் காணாமற்போன அரசாங்கப் படையினர் பெரும்பாலும் கொல்லப்பட்டிருக்கலாம். அவர்களின் உடல்களை விடுதலைப் புலிகள் எரித்திருக்கலாம் அல்லது காட்டு விலங்குகள் தின்றிருக்கலாம்.

அதில் நிறைய வேலை உள்ளது. எனவே அந்த முறைப்பாடுகளில் நாம் கைவைக்கவில்லை.

யார் காணாமற்போயிருந்தாலும் அதற்கு நாம் பொறுப்புக்கூற வேண்டும்.

வடக்கு கிழக்கில் போரின் போது காணாமற்போன 300 பேருக்கு மரணச்சான்றிதழ்களை வழங்குமாறு அரசாங்க அதிபர்களுக்கு ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன் அவர்களின் உறவுகளுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் மாவட்ட அரச அதிபர்களுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

முறைப்பாட்டாளர்கள் கோராமல் நாம் எந்த முறைப்பாட்டு கோப்பையும் மூடவில்லை.

நாம் யாரையும், மரணச்சான்றிதழ், நட்டஈடு பெறுமாறு நிர்ப்பந்திக்கவில்லை.

தமது உறவுகள் இறந்து விட்டதாக முறைப்பாட்டாளர் ஒருவர் நம்பினால், அவர்களுக்கு மரணச்சான்றிதழ் மற்றும் நட்ட ஈடுவழங்க பரிந்துரை செய்துள்ளோம்.

மரணச்சான்றிதழைப் பெறுவதற்கு போரின் போது அவர்கள் காவல்துறையில் முறையிட்டிருக்க வேண்டும் அல்லது செஞ்சிலுவைச் சங்கத்தில் முறையிட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யதிருந்தால் தான் எம்மால் அதற்கு பரிந்துரை செய்ய முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *