மேலும்

மாமியார் வீட்டில் அடைக்கலம் தேடியுள்ள கோத்தா – ‘சதித்திட்டம்’ குறித்து விபரிக்கிறார்

Mahinda-Gotaஅலரி மாளிகையை எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிடவுள்ளதாக கிடைத்த புலனாய்வு அறிக்கையை அடுத்தே,அதிபர் தேர்தல் நாளன்று இரவு தாம், அலரி மாளிகைக்குச் சென்றதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த 9ம் நாள் அதிகாலை அலரிமாளிகையில் சதிப்புரட்சிக்குத் திட்டமிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“தேர்தல் முடிவுகளையடுத்து, காலையில் அலரி மாளிகையை முற்றுகையிட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த புலனாய்வு அறிக்கையை அடுத்தே அதிகாலையில் அலரி மாளிகைக்குச் சென்றேன்.

அத்தகைய சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டது. சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெறப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் தொடர்பு கொள்ளப்பட்டது. தாம் உடனடியாக அலரி மாளிகைக்கு வருவதாக அவர் கூறினார்.

அவர் அங்கு வந்ததும், சிறிலங்கா அதிபருடன் கலந்துரையாடினார், அதையடுத்து அலரி மாளிகையை விட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியேறுவதாக முடிவு செய்யப்பட்டது.

அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஏனையவர்களினது பாதுகாப்புக்கு ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார்.

இது தான் தேர்தல் இறுதி முடிவு வெளியாவதற்கு முன்னர் நடந்தது.

நாம் சதிப்புரட்சிக்குத் திட்டமிட்டிருந்தால் எதற்காக, சட்டமா அதிபருடன் கலந்தாலோசிக்க வேண்டும்?

அவர் அரசாங்கத்துக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குபவர்.” என்றும் தெரிவித்துள்ளார்.

கல்கிசையில் உள்ள கோத்தாபய ராஜபக்சவின் வீட்டில் சுறாக்கள் வளர்க்கப்படுவதாகவும், அதற்காக நாளாந்தம் இரண்டு நீர்த்தாங்கிகளில் கடல் நீர் கொண்டு வரப்படுகிறது என்றும், அயலில் உள்ள நாய்கள் காணாமற்போவதாகவும், அவை சுறாக்களுக்கு இரையாக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள கோத்தாபய ராஜபக்ச-

அந்த வீடு மீன் ஏற்றுமதியாளருக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும்.

எனக்கு கல்கிசையிலோ சிறிலங்காவில் வேறெங்குமோ வீடுகள் இல்லை.

நான் இப்போது எனது மாமியார் வீட்டில் தான் வசிக்கிறேன். அந்த நிலம் எனது மனைவிக்கு சீதனமாக வழங்கப்பட்டது.

இராணுவத்தில் இருந்த போது அந்தக் காணியில் நாம் ஒரு வீட்டைக் கட்டியிருந்தோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *