மேலும்

மீறல்கள் குறித்து வெளியார் எவரும் விசாரிக்க முடியாது – என்கிறார் ரணில்

RANILரோம் பிரகடனத்தில் சிறிலங்கா கையெழுத்திடாததால், நாட்டில்இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து வெளியார் தலையீடு செய்து விசாரணை செய்ய முடியாது என்று சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்கா அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று  ஆரம்பமாக ஆசிய சட்டமா அதிபர்களின் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

16 நாடுகளின் சட்டமா அதிபர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க,

“ எமது நாட்டின் சட்ட கட்டமைப்பு 200 வருடங்கள் பழமையானது. என்றாலும் கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் எமது நீதித்துறை சவாலுக்கு உள்ளானது.

போர்க்காலத்தில் நீதிக்கட்டமைப்பு கணக்கில் எடுக்கப்படாதிருந்தது. அதனைக் கவனத்தில் எடுக்கத் தேவை இல்லை என்ற கருத்தே அன்று நிலவியது. போருக்குப் பின்னரும் நீதித்துறை நசுக்கப்பட்டது.

பயங்கரவாதத்தை ஒழித்த இராணுவத் தளபதி சிறையில் அடைக்கப்பட்டார். படையினர் தேசத்துரோகிகளாக்கப்பட்டனர். தேசத் துரோகிகள் வீரர்களாகினர். உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் பதவி நீக்கப்பட்டார்.

இவ்வாறு பல உதாரணங்களைக் குறிப்பிடலாம். அவற்றுக்கு முன்பாக சட்டத்தரணிகள் சங்கம் அசைந்து கொடுக்காது நேர்மையாக செயற்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களமும் அழுத்தங்களுக்கு உள்ளான போதிலும் நீதித்துறை முழுமையாக சீர்குலைய இடமளிக்கவில்லை.

இவ்வாறு நாட்டில் நிலவி வந்த முறைமையைக் கடந்த தேர்தலில் மக்கள் மாற்றி விட்டார்கள்.

இந்த மாற்றத்தின் கீழ் 19வது திருத்தத்தைக் கொண்டு வரவுள்ளோம். தற்போது இத்திருத்தம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே செயற்பட்ட சுதந்திர ஆணைக்குழுக்களுக்கு மீளப் புத்துயிர் ஊட்டவுள்ளோம். அத்தோடு நீதித்துறைக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும். இவை அனைத்தும் இத்திருத்தத்தின் ஊடாக இடம்பெறும்.

அதேநேரம் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான சட்டம், தகவலறியும் உரிமை தொடர்பான சட்டம், கணக்காய்வு தொடர்பான சட்டம் என்பனவும் விரைவில் நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வரப்படும்.

இவற்றை விரைவாக மேற்கொள்ளுமாறு நீதி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.

மேலும் நிறைவேற்று அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்கும் வகையில் மேற்பார்வை குழுவையும் நிதிக் குழுவையும் அமைக்கவுள்ளோம்.

நாம் ஐ.நா. மனிதஉரிமை ஆணைக்குழுவுடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு சாதகமான தீர்வுகளுக்கு வரவும் எதிர்பார்க்கிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *