மேலும்

மகிந்தவைத் தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றிய றோ அதிகாரி – பரபரப்புத் தகவல்

mahinda-சிறிலங்கா அதிபர் தேர்தலில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதில் இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ வின் கொழும்பு பணியகத் தலைமை அதிகாரியான இளங்கோ முக்கிய பங்காற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமானவராக இருந்த இந்தியாவின் ஆய்வு மற்றும் பகுப்பாய்வு அலகு (றோ) கொழும்பு பணியகத்தின் தலைமை அதிகாரியான இளங்கோ, மகிந்த ராஜபக்சவை வெளியேற்றுவதற்கு உதவியதாக அரசியல் மற்றும் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாகப் பணியாற்றியதற்காக, ‘றோ’ வின் தலைமை அதிகாரி தற்போது சிறிலங்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்.

எனினும்,  இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரி அவ்வாறு அவர் வெளியேற்றப்படவில்லை என்றும், வழக்கமான இடமாற்றமே இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் கோரியதற்கிணங்க, திடீரென அவருக்கு இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டு, இந்திய அரசாங்கத்தினால் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தை அடுத்தே ‘றோ’ வின் தலைமை அதிகாரி கொழும்பில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதேவேளை, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் இதுபற்றிய தகவல்களைத் தாம் அறிந்துள்ளதாக கூறியுள்ள போதிலும், அவற்றை உறுதிப்படுத்த மறுத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இதுபற்றி உண்மையான தகவல்களை உறுதிப்படுத்தும் வரை தாம் யாரையும் சந்தேகம் கொள்ளப் போவதில்லை என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்தே, ‘றோ’ அதிகாரி திருப்பி அழைக்கப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்காக, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை ஊக்குவிக்கும் கூட்டங்கள் சிலவற்றுக்கு ஒழுங்கு செய்ததாக, அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர் ஒருவரைப் பயன்படுத்தி,  ராஜபக்சவுக்கு எதிராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடக் கூடாது என்றும், அவர் ஒதுங்கி நின்றால் வெற்றி நிச்சயம் என்றும், ‘றோ’ அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த ‘றோ’ அதிகாரி முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுடனும் தொடர்பு வைத்திருந்தார். அவரே மைத்திரிபால சிறிசேனவை அதிபர் தேர்தலில் போட்டியிட வைத்தவராவார்.

அவர்கள் (‘றோ’) இந்த விடயத்தில் தீவிரமாக பங்காற்றியதாகவும், ரணில் மற்றும் சந்திரிகாவுடன் பேச்சுக்களில் ஈடுபட்டதாகவும், இந்தியாவுக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், தகவல் வெளியிட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *