மேலும்

பாப்பரசர் வருகையின் போது சிறிலங்காவில் நிகழ்ந்த 3 ஆட்சி மாற்றங்கள்

pope-arraival (3)பாப்பரசர்கள் பயணம் மேற்கொண்ட தருணங்களில், சிறிலங்காவில் மூன்றுமுறை ஆட்சிமாற்றங்கள் ஏற்பட்டுள்ளது ஒரு விநோதமான விடயம் என்று ஊடகங்கள் விபரித்துள்ளன.

சிறிலங்காவுக்கு கடந்த நான்கு பத்தாண்டுகளில் பாப்பரசர் பயணம் மேற்கொண்ட மூன்று தருணங்களிலும், ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

சிறிலங்காவுக்கு முதல்முறையாக பாப்பரசர் ஒருவர் பயணம் மேற்கொண்டது, 1970ம் ஆண்டு டிசெம்பர் 4ம் நாளாகும்.

அப்போது பாப்பரசராக இருந்த நான்காவது போல், கொழும்பு வந்த போதும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருந்தது.

பாப்பரசருக்கு சிறிலங்கா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் ஐதேகவைச் சேர்ந்த  பிரதமரான டட்லி சேனநாயக்க.

ஆனால், பாப்பரசரை வரவேற்கும் போது, அவரது ஆட்சி கவிழ்ந்து, சிறிலங்கா சுதந்தரக் கட்சி ஆட்சியைப் பிடித்திருந்தது.

இதனால், பாப்பரசரை நான்காவது போலை, பிரதமரான சிறிமாவா பண்டாரநாயக்கவே வரவேற்றார்.

பாப்பரசரின் இரண்டாவது சிறிலங்கா பயணம், 1995ம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றது.

இதன்போதும், பாப்பரசரை கொழும்பு வருமாறு அழைத்த அரசதலைவர், அவர் வரவேற்கும் போது பதவியில் இருக்கவில்லை.

முன்னாள் அதிபர் டி.பி. விஜேதுங்கவே, பாப்பரசராக இருந்த இரண்டாவது ஜோன் போலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், இரண்டாவது ஜோன் போல் கொழும்பு வந்த போது அவரை, அதிபராகப் பொறுப்பேற்றிருந்த சந்திரிகா குமாரதுங்கவே வரவேற்றார்.

அதுபோலவே, இம்முறையும், பாப்பரசரை சிறிலங்கா வருமாறு கடந்த நொவம்பர் மாதம் வத்திக்கானுக்குச் சென்று அழைப்பு விடுத்திருந்தார் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

ஆனால், நேற்று பாப்பரசர்  சிறிலங்கா வந்த போது, அவரை வரவேற்க மகிந்த ராஜபக்ச செல்லவில்லை.

அதற்கிடையில் அவரது ஆட்சி பறிபோயிருந்தது. புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன தான் பாப்பரசரை வரவேற்றார்.

கடந்த 9ம் நாள், ஆட்சியை சுமுகமாக ஒப்படைக்க இணங்கிய போது, பாப்பரசரை வரவேற்க வருமாறு மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்திருந்தார் ரணில் விக்கிரமசிங்க.

ஆனாலும் மகிந்த ராஜபக்ச அதனை நிராகரித்து விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *