மேலும்

‘சிறிலங்காவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கம் மக்களுக்கு நீதி வழங்கக்கூடிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்’

Amnestyசிறிலங்காவின் முன்னைய அரசாங்கம் போலல்லாது சிறிலங்காவின் தற்போதைய புதிய அரசாங்கமானது நாட்டில் இடம்பெறும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மிகத் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

அண்மையில் சிறிலங்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் 51.3 சதவீத வாக்குகளைப் பெற்று மைத்திரிபால சிறிசேன புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இவர் முன்னைய அதிபர் மகிந்த ராஜபக்சவை இத்தேர்தலில் தோற்கடித்துள்ளார்.

“எதிரணியால் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பரப்புரைகளில் ஊறுவிளைவிக்கும் முகமாகப் பல்வேறு தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் இடம்பெற்ற போதிலும், தேர்தல் இடம்பெற்ற அன்றைய தினம் பெரிதளவில் எவ்வித வன்முறைகளும் இடம்பெறவில்லை. அனைத்து சிறிலங்கா குடிமக்களும் எவ்வித அச்சமுமின்றி தமக்குள்ள அரசியல் உரிமையைப் பயன்படுத்தி வாக்குகளை அளிக்க முடியும் என்பதை சிறிலங்காவில் கடமையில் ஈடுபட்டிருந்த துணிச்சலுள்ள தேர்தல் கண்காணிப்பாளர்கள் வன்முறையற்ற தேர்தலை மேற்கொண்டதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்” என அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிரதி இயக்குனர் டேவிட் கிறிபித்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் மூலம் சிறிலங்காவில் தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய அரசாங்கமானது நாட்டில் மனித உரிமைகளை மதித்து இதயசுத்தியுடன் கூடிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஒரு நல்வாய்ப்பைப் பெற்றிருப்பதாகவும், இதனை இந்த அரசாங்கம் கைக்கொள்ளத் தவறக்கூடாது எனவும் பிரதி இயக்குனர் டேவிட் கிறிபித்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஆட்சிக்கு வந்துள்ள சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த மனித உரிமை நிகழ்ச்சி நிரலில் ஏழு முக்கிய விடயங்களை முன்னுரிமைப்படுத்த வேண்டும் எனவும் அனைத்துலக மன்னிப்புச் சபை கோடிட்டுக் காட்டியுள்ளது.

நீதிச்சேவையின் சுதந்திரம் மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு போன்றவற்றைக் குழிதோண்டிப் புதைத்து, சிறிலங்காவின் அதிபருக்கு அரசின் முக்கிய அதிகாரங்களை வழங்குகின்ற 18வது அரசியல் சீர்திருத்தம் மற்றும் மனித உரிமைகளை மீறி பல்வேறு குற்றங்களில் ஈடுபடக்கூடிய அனுமதியை சிறிலங்காவின் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்குகின்ற பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உட்பட பல்வேறு சட்டங்கள் அரசியல் யாப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது மக்களின் கருத்து வெளிப்படுத்தல் சுதந்திரத்தைப் பாதுகாப்பதுடன், ஊடகவியலாளர்களும் மனித உரிமைப் பாதுகாப்பாளர்களும் அடக்குமுறைச் சூழலில் வாழ்வதை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் எனவும், சிறுபான்மை மதத்தினர் மீதான தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அனைத்துலக மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

“18வது திருத்தச் சட்டத்தை நீக்குவதை புதிய அரசாங்கம் தான் செய்யவேண்டிய செயற்திட்டங்களில் முதன்மைப்படுத்த வேண்டும். மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் பரப்புரையின் போது இதனைச் செய்வதாக வாக்குறுதியளித்திருந்ததால் இவர் 18வது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கையை விரைந்து முன்னெடுக்க வேண்டும். இத்திருத்தச் சட்டமானது நீதிச்சேவைகள் மற்றும் ஏனைய முக்கிய அதிகாரங்களை சிறிலங்காவின் நிறைவேற்று அதிபர் தன்வசம் வைத்திருப்பதற்கான அதிகாரத்தையும் இதன்மூலம் நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படாது அவை குழிதோண்டிப் புதைக்கப்படுவதற்கான அதிகாரத்தையும் வழங்குகிறது” என டேவிட் கிறிபித்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரின் போது அதில் பங்குகொண்ட இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட பல்வேறு போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா தலைமையிலான விசாரணைக்கு ஆதரவாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு மார்ச் 2015ல் இடம்பெறவுள்ளது.

“கடந்த சில பத்தாண்டாக சிறிலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பொறுப்பளிக்கத் தவறியுள்ளமையானது மிகப்பெரிய துன்பகரமான விதிமுறையாகக் காணப்படுகிறது. இவ்வாறான மீறல்களால் பாதிக்கப்பட்ட பல பத்தாயிரக்கணக்கான சிறிலங்கா வாழ் மக்கள் தமக்கு நீதி கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர். இதனைக் கருத்திற்கொண்டு சிறிலங்காவில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கம் மக்களுக்கு நீதி வழங்கக்கூடிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என டேவிட் கிறிபித்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

“போர்க் காலங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் சிறிலங்கா பல ஆண்டுகளாக எதிர்த்துள்ளது. இதற்குப் பதிலாக அரசாங்கத்தின் ஆதரவுடன் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை மேற்கொள்வதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிவந்துள்ளது. தற்போதைய புதிய அரசாங்கம் இதனை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், ஐ.நா விசாரணைக்கு தனது முழு ஆதரவையும் வழங்க வேண்டும்” என அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதி இயக்குனர் டேவிட் கிறிபித்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *