மேலும்

மகிந்தவைத் தூக்கியெறியும் கொமன்வெல்த் – கொழும்பு ஆய்வாளர் எச்சரிக்கை

நாளை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், மோசடிகளைச் செய்து வெற்றி பெற முனைந்தால், கொமன்வெல்த் அமைப்பின் தலைமைப் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச தூக்கியெறியப்படும் நிலை உருவாகும் என்று கொழும்பு அரசியல் ஆய்வாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில், பிரபல அரசியல் ஆய்வாளரான உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

“நாளை நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்க அனைத்துலகப் பார்வையாளர்கள் வந்துள்ளனர்.

கயானாவின் முன்னாள் அதிபர் பார்வத் ஜக்டியோ தலைமையில் கொமன்வெல்த் அமைப்பும் கண்காணிப்பாளர் குழுவொன்றை அனுப்பியுள்ளது.

பார்வத் ஜக்டியோவே, அதிபரின் பதவியை இரண்டு முறைகளுக்கு வரையறுக்கும், கயானாவின் அரசியலமைப்பில் கையெழுத்திட்டவர்.

இரண்டு முறை பதவிக்காலத்தில் இருந்த பின்னர், அமைதியாக ஓய்வு பெற்றவர்.

ஆனால், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இரண்டாவது முறை வெற்றி பெற்றதும், அரசியலமைப்பைத் திருத்தி, தனது மூன்றாவது பதவிக்காலத்துக்கு வழி வகுத்தவர்.

அதிபரின் பதவிக்காலத்தை வரையறையின்றி நீடித்த மகிந்த ராஜபக்ச போட்டியிடும் இந்த தேர்தலை, தமது நாட்டில் அதிபரின் பதவிக் காலத்தை இரண்டு முறைக்கு வழிவகுத்த ஒருவர், கண்காணிக்க வந்துள்ளது அசாதாரணமானது.

மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் அதிபராக மட்டும் இருக்கவில்லை, கொமன்வெல்த் அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார்.

எனவே, கொமன்வெல்த் அமைப்பு வைத்த கண் வாங்காமல் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

நாளை நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாக கொமன்வெல்த் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜக்டியோ கரிசனைகள் வெளியிட்டுள்ளார்.

இந்த தேர்தலில், மோசடிகள் முறைகேடுகள் இடம்பெற்றால், அது சிம்பாப்வே மீதான கொமன்வெல்த் அமைப்பின் நடவடிக்கைகளை ஒத்தநிலையை உருவாக்கும்.

அங்கு அதிபர் ரோபர்ட் முகாபே தேர்தல் முறைகேடுகளை மேற்கொண்டதாக கண்காணிப்பாளர்கள் கண்டறிந்ததையடுத்து, தென்னாபிரிக்க அதிபராக இருந்த தபோ மொபெக்கி, நைஜீரிய அதிபர்  ஒலுசெகுன் ஒபசஞ்யோ, அவுஸ்ரேலியப் பிரதமர் ஜோன் ஹவார்ட் ஆகியோர், 12 மாதங்களுக்கு கொமன்வெல்த் அமைப்பில் இருந்து சிம்பாப்வேயை இடைநிறுத்துவதாக அறிவித்தனர்.

அதேபோன்றதொரு நிலை சிறிலங்காவுக்கும் ஏற்படலாம்.

சிறிலங்கா தனியே கொமன்வெல்த்தின் ஒரு உறுப்பு நாடு மட்டுமல்ல, சிறிலங்கா அதிபர் அதன் தலைவராகவும் பணியாற்றுகின்றார்.

எனவே அவர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

நாளை நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், மோசடிகள் இடம்பெற்றது நிரூபிக்கப்பட்டால், கொமன்வெல்த்தின் உறுப்புரிமையை மட்டும் சிறிலங்கா இழக்காது. அதன் தலைமைப் பதவியும் கூடப் பறிபோகும்.

கொமன்வெல்த் வரலாற்றில் அத்தகைய சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கவில்லை.

இந்த உண்மைகளை மகிந்த ராஜபக்ச உணர்ந்திருப்பார் என்றும் உபுல் ஜோசப் பெர்னான்டோ தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *