மேலும்

இராணுவத் தலையீடுகளால் வடக்கில் வாக்களிப்பு குறையும் – கண்காணிப்பாளர்கள் அச்சம்

CMEVகடுமையான இராணுவப் பிரசன்னம் காரணமாக வடக்கு மாகாணத்தில் குறிப்பாக, யாழ்.மாவட்டத்தில், நாளை நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறையலாம் என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தின் பேச்சாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, மற்றும், தலைமை ஒழுங்கிணைப்பாளர் டி.எம்.திசநாயக்க ஆகியோர் கொழும்பில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

“பாதுகாப்பு வழங்குவது என்ற போர்வையில், சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் இராணுவத்தை நிறுத்தியுள்ளது, வாக்காளர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

போருக்குப் பிந்திய இராணுவப் பிரசன்னம் வடக்கு மாகாணத்தில், தேர்தல் செயற்பாடுகளை பாதிக்கக் கூடும்.

வடக்கில் சிறிலங்கா படையினர் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாகப் பரப்புரை செய்கின்றனர்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலின் போதும் இத்தகைய இராணுவத் தலையீடுகள் இருந்தன.

எனினும், தேர்தல் கண்காணிப்பாளர்கள், சட்டவாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், தேர்தல் செயல்முறைகளில் இராணுவம் தலையிடும் முயற்சிகளை முறியடித்திருந்தனர்.

தாம் விரும்பிய வாக்காளர்களுக்கு வாக்களிக்கின்ற தமிழ் வாக்காளரின் உரிமை, இராணுவத் தலையீடுகளால், மீறப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *