மேலும்

தமிழ்த் திரைப்படத்துக்கு இந்தியாவில் தடை – சிறிலங்காவுடனான நட்புவை பாதிக்குமாம்

Porkalathil Oru Pooநட்பு நாடான சிறிலங்காவுடனான உறவுகளைப் பாதிக்கும் என்ற காரணத்தைக் காட்டி, இறுதிக்கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் வரலாற்றைச் சித்திரிக்கும் தமிழ்த் திரைப்படத்துக்கு இந்திய மத்திய தணிக்கைச் சபை அனுமதி மறுத்துள்ளது.

‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை, வெளியிடுவதற்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு இறுதிப் போரின் பின்னர் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த பின்னர், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவியதாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், இது வெளிநாடுகளுடனான நட்புறவைப் பாதிக்கும் என்ற அடிப்படையிலேயே மத்திய தணிக்கைக்குழு இந்த திரைப்படத்துக்கு அனுமதி மறுத்திருக்கிறது

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தணிக்கைச் சபையின்  பிராந்தியத் தலைவர் நடிகர் எஸ்.வி.சேகர், தமது முடிவை நியாயப்படுத்தியுள்ளார்.

“திரைப்படச் சட்டத்தில், நட்பு நாடுகளுடனான உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதிரைப்படங்களுக்கு நான்றிதழ் வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. அதனை மீறி எம்மால் சான்றிதழ் வழங்க முடியாது.

உள்நாட்டுப் போரில் என்ன நடந்தது என்று எம்மால் வாதிக்க முடியும். ஆனால், அதை வைத்து. திரைப்படத்தை திரையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கருதக் கூடாது.

அதேவேளை இந்த திரைப்படத்தை எந்த வெட்டுகளும் இல்லாமல் வெளிநாட்டில் திரையிடலாம். ஆனால் இந்தியாவில் திரையிட முடியாது” என்று கூறியுள்ளார்.

அதேவேளை, ஆயுதப்படைகளின் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்துவதற்கு தமக்கு அனுமதி இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ள படத்தின் இயக்குனர் கே.கணேசன், சிறிலங்காவை நட்பு நாடாக கருதக் கூடாது என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *