பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து சிறிலங்கா அதிபருடன் அமெரிக்க தூதுவர் ஆலோசனை
அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்து அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை இன்று சந்தித்து, அமெரிக்கா – சிறிலங்கா இடையிலான ஒத்துழைப்பின் எதிர்காலம் மற்றும் இரு தரப்புக்கும் பொதுவான முன்னுரிமைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்.
எங்களது வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, நாடுகடந்த குற்றச் செயல்களை எதிர்கொள்வதில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான கூட்டு முயற்சிகள், மற்றும் சிறிலங்காவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நம்பகமான அமெரிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்.
எங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பொருளாதாரங்களுக்கு ஆதாரமாக விளங்கும் வர்த்தகப் பாதைகளைப் பாதுகாக்கவும், மேலும் சுதந்திரமான, திறந்த மற்றும் வளமான இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கர்களுக்கும் இலங்கையர்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், இதுவரை அடைந்துள்ள இந்த முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதியுடன் உள்ளோம். என்று“ அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

