மேலும்

சஷி வீரவன்சவின் மேன்முறையீடு தள்ளுபடி- 2 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி

சட்டவிரோதமாக இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்ற குற்றத்திற்காக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை சிறிலங்கா உயர்நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சஷி வீரவன்ச  தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டையும், பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சுரசேன தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு, இன்று தள்ளுபடி செய்தது.

மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சஷி வீரவன்சவை உடனடியாக விளக்கமறியலில் வைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்காக, அவரை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் உயர்நீதிமன்ற அமர்வு பணித்தது.

இந்தக் குற்றச்சாட்டில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட சஷி வீரவன்சவுக்கு, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் கடந்த 2022 மே 27 ஆம் நாள் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தது.

இதனை எதிர்த்து அவர்  செய்த மேன்முறையீட்டை  கொழும்பு மேல் நீதிமன்றம், 2026 ஜூன் 11ஆம் நாள் தள்ளுபடி செய்து, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதிப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, அந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி அவர் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

தற்போது உயர்நீதிமன்றமும் அவரது மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்துள்ளதால், அவர் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *