மேலும்

ஞானசார தேரரின் 4 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம்

இஸ்லாமிய மதத்தை அவமதித்தது, மற்றும்  மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய கருத்துகளை வெளியிட்டதற்காக  கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு  கடுங்காவல் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பையும் தண்டனையையும் ரத்து செய்யக் கோரி, ஞானசார தேரர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து, அவருக்கான தண்டனையை உறுதி செய்துள்ளது.

2016-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள்  கிருலப்பனையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ​​குரகல கோயில் தொடர்பாக ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துகள் தொடர்பாக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அவரது கருத்துகள் இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையிலும், இன மற்றும் மத சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாகவும் அமைந்ததாகக் குற்றம்சாட்டி, சட்டமா அதிபர் அவர் மீது தண்டனைச் சட்டக்கோவையின் 291-வது பிரிவின் கீழ் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

2024-ஆம் ஆண்டு, கொழும்பு மேல் நீதிமன்றம் ஞானசார தேரர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து,  அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்தது.

மேலும், அவருக்கு ஒருஇலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் தீர்ப்பையும் எதிர்த்து, ஞானசார தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இருப்பினும், அவரது மேன்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தியது.

ஞானசார தேரர் ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *