இந்தியப் பாதுகாப்பு அமைச்சருக்கு சிறிலங்கா அதிபர் அளித்துள்ள வாக்குறுதி
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பாதகமான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும், தனது நிலப்பரப்பைப் பயன்படுத்த கொழும்பு ஒருபோதும் அனுமதிக்காது என்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் உறுதியளித்துள்ளார்.
நேற்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீன ஆக்கிரமிப்பு மற்றும் சிறிலங்கா மற்றும் அதன் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் பீஜிங்கின் விரிவடைந்து வரும் ஆதிக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது என்றும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
38 ஆண்டுகளின் பின் சிறிலங்காவுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் மேற்கொண்ட இந்த முதல் பயணத்தின் போது, சிறிலங்கா விமானப்படைக்கான எல்70 ரக பீரங்கிகளை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளின் தேசிய மாணவர் படையணி மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரிகளுக்கு இடையே ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதற்கும் இரு நாடுகளும் புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளன..
இந்தியா இதற்கு முன்னர் சிறிலங்கா விமானப்படைக்கு இந்தப் பீரங்கிகளை வழங்கியிருந்தது.
இந்தத் திட்டத்திற்கு இந்திய அரசாங்க மானியம் மூலம் நிதியளிக்கப்படும். இது சிறிலங்காவின் வான் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“பாரம்பரியமாக சுமுகமான உறவுகள் மற்றும் பரஸ்பர நம்பிக்கையால் வகைப்படுத்தப்படும், இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முகக் கூட்டாண்மையின் முழு அளவிலான பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆழமான கலந்துரையாடல்களை நடத்தினர்,” என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பாதகமான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் தனது நிலப்பரப்பைப் பயன்படுத்த சிறிலங்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று, சிறிலங்கா அதிபர் மீண்டும் வலியுறுத்தினார்.
பிராந்தியத்தின் பாதுகாப்பு, அமைதி மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்காக கூட்டாகப் பணியாற்றும் அதேவேளையில், இந்தியாவும் சிறிலங்காவும் தங்கள் மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சிறிலங்கா அதிபருடனான சந்திப்பின் போது, பாதுகாப்பான கடல்வழிப் பாதைகள், கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம், சர்வதேச சட்டத்திற்கான மரியாதை மற்றும் தடையற்ற கடல்சார் வர்த்தகம் ஆகியவை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கூட்டுப் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு மிக முக்கியமானவை,” என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
மேலும், சாதகமான மற்றும் பாதுகாப்பான கடல்சார் சூழலை உருவாக்குவதற்கும், வளர்ந்து வரும் கடல்சார் சவால்களை எதிர்கொள்வதற்கும் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே மேம்பட்ட ஒத்துழைப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்தியாவும் சிறிலங்காவும் பொதுவான பெருங்கடலால் பிணைக்கப்பட்டுள்ளன என்றும், கடல்சார் பாதுகாப்பு என்பது வெறும் கோட்பாட்டு விடயம் அல்ல, மாறாக அது இரு நாடுகளின் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தலைவிதியை வடிவமைக்கும் ஒரு யதார்த்தம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா, இந்தியாவிற்கு ஒரு நட்பான அண்டை நாடு, நீண்டகால நண்பர் மற்றும் நம்பகமான கூட்டாளி. இந்தப் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு குறித்த எந்தவொரு மூலோபாய உரையாடலுக்கும் இரு நாடுகளும் மையமானவை.
வலுவான இந்தியா-சிறிலங்கா கடல்சார் ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மை பயக்கும் மற்றும் கூட்டு வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு இன்றியமையாததாக இருக்கும்,” என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.
