சிறிலங்கா இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை அமைக்கவுள்ள இந்தியா
சிறிலங்கா இராணுவத்திற்காக இந்தியா செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை அமைத்துக் கொடுக்கும் என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள, இந்திய கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ் உதயகிரியில் நேற்றிரவு இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய போதே,இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
எதிர்காலத்தில் சிறிலங்கா ஆயுதப் படைகளின் திறன்களை வலுப்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தின் திறனை மேம்படுத்துவதற்காக, இந்த செயற்கை நுண்ணறிவு மையத்தை உருவாக்க இரு நாடுகளும் இணைந்து செயற்படும் என ராஜ்நாத் சிங் அறிவித்துள்ள போதும், சரியான தொழில்நுட்ப விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
எனினும், தரவுப் பகுப்பாய்வு, கண்காணிப்பு, தளபாடத் திட்டமிடல் மற்றும் விரைவான முடிவெடுத்தல் போன்ற துறைகளில் இந்த ஆய்வகம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள இராணுவங்கள் செயற்கை நுண்ணறிவு கருவிகளை இந்தத் துறைகளிலேயே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன.
இதனிடையே, கொழும்புத் துறைமுகத்தில் ஐ.என்.எஸ் உதயகிரி கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது, ராஜ்நாத் சிங், சிறிலங்கா விமானப்படைக்கான இந்திரா MK 2 ராடரின் உதிரிப்பாகங்களையும், சிறிலங்கா கடற்படைக் கப்பலான சயுரவிற்கான உதிரி ப்பாகங்கள் உள்ளிட்ட கருவிகளையும் சிறிலங்கா அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
சிறிலங்கா இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை உருவாக்க இந்தியா உதவும் என்ற அறிவிப்பை அடுத்து, சிறிலங்காப் படைகளின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு இந்தியா அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ நன்றி தெரிவித்தார்.
மேலும், கூட்டு ரோந்துப் பணிகள் மற்றும் பகிரப்பட்ட பயிற்சிப் பயிற்சிகள் மூலம் இரு நாடுகளும் கடற்படை ஒத்துழைப்பை ஆழப்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறினார்.



