சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக பேராயர் மல்கம் ரஞ்சித் சட்ட நடவடிக்கை
அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட ஒரு பொய்யான அறிக்கை தொடர்பாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தசநாயக்க மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் பதவி நீடிப்புத் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தசநாயக்க வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
“ஜூலை 10 ஆம் நாள் அல்லது அதற்குச் சற்று முன்னரோ, பின்னரோ நடைபெற்ற ஒரு கூட்டு எதிர்க்கட்சிக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஆற்றிய உரையின் போது வெளியிடப்பட்ட கருத்து, பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டது.
அந்த உரையின் போது, பழக்கூடை ஒன்றை வழங்கும் நோக்கில், சிறிலங்கா இராணுவத் தளபதி ஜூலை 2 ஆம் நாள் பேராயர் மாளிகைக்கு வருகை தந்ததாக அவர் கூறியிருந்தார்.
இராணுவத் தளபதியின் பதவிக்காலம் அன்றைய நாள் முடிவடைய இருந்ததாகவும் அவர் கூறினார்.
இந்தப் பழக்கூடை வழங்கப்பட்ட பின்னரே, அவரது பதவிக்காலம் 2028 ஜனவரி அல்லது பிப்ரவரி வரை நீடிக்கப்பட்டது.
திருத்தந்தை தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பேராயர் வத்திக்கானுக்குப் பயணம் செய்து, ஜூலை 3 ஆம் நாளே நாடு திரும்பினார்.
சிறிலங்கா இராணுவத் தளபதியும் பேராயரும் ஒருமுறை கூட சந்தித்ததில்லை.
எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ள கூற்று முற்றிலும் பொய்யானது. அதை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம்.
அவருடைய முழு அறிக்கையின் பின்னணியில் உள்ள நோக்கம், மதப் பிரிவினைகளைத் தூண்டி, நாட்டின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, குறுகிய அரசியல் ஆதாயத்தைப் பெறும் முயற்சியே என்பது தெளிவாகிறது.
இருப்பினும், இந்த நாட்டு மக்கள், அந்த நாடாளுமன்ற உறுப்பினரை விட மிகவும் புத்திசாலிகள், விவேகமுள்ளவர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
பேராயரின் சட்டப் பிரதிநிதிகள், இந்தப் பொய்யான அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீது ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
