இந்திய- சிறிலங்கா கூட்டுக் குழுவே 450 மில்லியன் டொலர் நிதியை கையாளும்
பேரிடருக்குப் பிந்திய மீள்கட்டுமானப் பணிகளுக்கான இந்தியாவின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவிப் பொதியை கையாளுவதற்காக, சிறிலங்கா மற்றும் இந்திய அதிகாரிகளைக் கொண்ட கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
இந்த நிதியைக் கையாளும் பொறுப்பு இந்தக் குழுவிடமே ஒப்படைக்கப்படும் என்று சிறிலங்காவின் மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு திட்டங்கள், இந்திய கடன் திட்டத்தின் கீழ் செய்ய வேண்டிய கொள்வனவுகள் மற்றும் திட்டங்களை விரைவுபடுத்த இந்தியாவிலிருந்து மனிதவளத்தை பயன்படுத்துதல் குறித்து இந்தக் கூட்டு குழு முடிவு செய்யும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
வீதிகள் மற்றும் தொடருந்து, சுகாதாரம் மற்றும் கல்வி, வீட்டுவசதி, விவசாயம் மற்றும் உடனடி பேரிடர் மீட்புக் குழுவை நிறுவுதல் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ், மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் மற்றும் ஒன்பது மாதங்களில் திட்டங்களை முடிக்க கூட்டுக் குழு மூன்று காலக்கெடுக்களின் கீழ் செயற்படவுள்ளது.
வீட்டுவசதி, மருத்துவம், கல்வி, தொடருந்து மற்றும் வீதியமைப்பு தொடர்பான மறுசீரமைப்பு திட்டங்களுக்கு, தொழில்நுட்ப ஆதரவு உள்ளிட்ட உதவிகளுக்கு இந்திய குழுக்கள் சிறிலங்காவில் தங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய தூதரகம், கூட்டங்களை நடத்துவது, முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வது பற்றிய கூட்டங்களை அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கும்.
முதல் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. அதன் போது, முன்னுரிமையளிக்கப்பட்ட மறுசீரமைப்பு திட்டங்களின் பட்டியல் அடையாளம் காணப்படும்.
இந்தியாவில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவைப் போன்ற, ஒரு உடனடி பேரிடர் மீட்புக் குழுவை நிறுவுவதற்கும் இந்திய அரசாங்கம் உதவும். அதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்கப்படும்.
