ஜேவிபி தலைமையகத்தில் சீனாவின் உயர்மட்டக் குழு- டில்வினுடன் சந்திப்பு
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் நேற்று ஜே.வி.பி பொதுச்செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட ஜேவிபி தலைவர்களைச் சந்தித்துள்ளனர்.
பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சீனத் தரப்பில் இந்தச் சந்திப்பில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்தியக் குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சிப் பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் செயலாளருமான வாங் ஜூன்ஷெங், சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் சர்வதேசப் பிரிவின் தென்கிழக்கு மற்றும் தெற்காசிய விவகாரப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பெங் சியுபின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜேவிபி தரப்பில், அமைச்சர்கள் சுனில் ஹந்துனெத்தி, வசந்த சமரசிங்க மற்றும் பலர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதன்போது, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பு, ஜே.வி.பியின் வரலாறு, தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் சீன பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவைத் தொடரும் சீனாவின் உறுதிப்பாட்டை வாங் ஜூன்ஷெங் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
வரும் ஆண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தம் இதன் போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளது.

