13 ஆயிரம் கொள்கலன்கள் தேக்கம்- கொழும்பு துறைமுகத்தில் நெருக்கடி
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள 13 ஆயிரம் கொள்கலன்களை அகற்றுவதற்கு உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்பட்ட போதும், பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.
இதனால் அனைத்து முனையங்களிலும் கிட்டத்தட்ட 13,000 கொள்கலன்கள் அனுமதிக்காகக் காத்திருக்கின்றன என்று சிறிலங்கா கப்பல் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் 13,000 க்கும் மேற்பட்ட இறக்குமதி கொள்கலன்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை கொழும்பு அனைத்துலக கொள்கலன் முனைத்தில் குவிந்துள்ளன.
இது துறைமுக நெரிசலைத் தொடர்ந்து அதிகரிக்கச் செய்து வருகிறது.
டிசம்பர் 23,ஆம் திகதி துறைமுகத் தரவுகளின்படி, ஐந்து முனையங்களில் மொத்தம் 13,180 இறக்குமதி கொள்கலன்கள் உள்ளன.
இவற்றில், கொழும்பு அனைத்துலக முனையத்தில் மட்டும் 8,431 கொள்கலன்கள் (63.96%) தேங்கியுள்ளன.
அதைத் தொடர்ந்து ஜயா கொள்கலன் முனையத்தில் 1,880 கொள்கலன்களும் (14.26%), தெற்காசிய நுழைவாயில் முனையத்தில் 1,480 கொள்கலன்களும் (11.22%), கொழும்பு மேற்கு அனைத்துலக முனையத்தில் 780 கொள்கலன்களும் (5.91%), மற்றும் கிழக்கு கொள்கலன் முனையத்தில் 609 கொள்கலன்களும் (4.62%) தேங்கிக் கிடங்கின்றன.
கொழும்பு ஆனைத்துலக கொள்கலன் முனையத்தில் உள்ள 8,431 கொள்கலன்களில், சுமார் 5,430 கொள்கலன்கள் (65%) இறக்குமதி கொள்கலன்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கொள்கலன்களில் 3,529 – கிட்டத்தட்ட 65வீதமானவை- சுங்க ஸ்கான் வெளியீடு அல்லது விலக்குக்கு தகுதியுடையவை. அதாவது அவை துறைமுகத்தை விட்டு வெளியேற்றத் தயாராக இருப்பவையாகும்.
அனுமதி வழங்கப்பட்ட போதிலும், இந்த கொள்கலன்கள் வடக்கு கொள்கலன் முனையம் வாயில் வழியாக வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், துறைமுகத்திற்குள் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஒரு வழக்கமான வார நாளில், சுமார் 2,000 இறக்குமதி கொள்கலன்கள் வடக்கு கொள்கலன் முனைய வாயில் வழியாக வெளியேறுகின்றன.
இதில் சுமார் 80 வீதமானவை, அல்லது 1,600 கொள்கலன்கள் – கொழும்பு மேற்கு அனைத்துலக முனையம் மற்றும் கொழும்பு அனைத்துலக கொள்கலன் முனையம், மற்றும் தெற்காசிய அனைத்துலக முனையங்களில் இருந்வே கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் பாரஊர்திகள் வடக்கு கொள்கலன் முனைய வாயிலை அடைய துறைமுகத்திற்குள் கிட்டத்தட்ட 12 கி.மீ தூரம் பயணிக்க வேண்டும்.
இந்த தேவையற்ற இடை-முனைய இயக்கம் உள் துறைமுக வீதிகளில் கடுமையான நெரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இடை-முனைய பாரஊர்தி போக்குவரத்து இடையூறுகள், சரக்கு வெளியேற்றம் மற்றும் அனுமதியில் தாமதங்களை ஏற்படுத்துகின்றது.
கொழும்பு துறைமுகத்தில் நெரிசல் மோசமடைவதற்கு இந்த திறமையற்ற வழித்தடம் ஒரு முக்கிய பங்களிப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு உடனடியான நடவடிக்கைகளின் மூலம் நெரிசலை கணிசமாகக் குறைக்க முடியும் என்று தொழில்துறை பங்குதாரர்கள் கூறுகின்றனர்.
முதலாவதாக, தெற்காசிய முனையம் அருகே துறைமுக அணுகல் சாய்வுப் பாதையை சிறிலங்கா துறைமுக அதிகாரசபை விரைவாக முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது செயல்பாட்டுக்கு வந்ததும், இந்த சாய்வுதளம் கொள்கலன்களை நேரடியாக வெளியேற அனுமதிக்கும். இது வடக்கு கொள்கலன் முனைய வாயிலில் அழுத்தத்தை கிட்டத்தட்ட 50% குறைக்கும்.
அத்துடன், நாளாந்த நுழைவாயில்-வெளியேற்ற அளவை 2,000 இலிருந்து 976 கொள்கலன்களாகக் குறைக்கும்.
இரண்டாவதாக, சிறிலங்கா சுங்கத்துறை, உயர்த்தப்பட்ட சாலை அணுகலுக்கு அருகில் கொள்கலன் ஸ்கானிங் இயந்திரங்களை நிறுவ அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஸ்கான் வெளியிடப்பட்ட கொள்கலன்கள் வடக்கு முனையம் வழியாக திருப்பி அனுப்பப்படாமல் நேரடியாக வெளியேற முடியும்.
போக்குவரத்து மற்றும் தளவாட சங்கங்கள் அதிகாரிகளிடம் இந்த கவலைகளை அவசரமாக எழுப்புமாறு அழைப்பு விடுத்துள்ளன.
பிராந்திய துறைமுகங்கள் தமது திறன்களை தீவிரமாக மேம்படுத்தி வரும் நிலையில், செயல்படத் தவறினால் கொழும்பு துறைமுகத்தின் போட்டித்தன்மை மேலும் சிதைந்துவிடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மோசமான ஒருங்கிணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு தடைகளால் இந்த நெரிசர் ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
