பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவை சவாலுக்குட்படுத்துவேன்
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப் போவதாக முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் தற்காலிக ஏற்பாடாகவே இயற்றப்பட்டது.
2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்ததன் பின்னர் பயங்கரவாத தடைச்சட்டம் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது.
ஆட்சியாளர்கள் தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கும், எதிர்கால அரசியலுக்காகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாக பயன்படுத்தினார்கள்.
இதன் பின்னரே, பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் எதிர்ப்புக்கள் எழுந்தன.
பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்வதாக நாங்கள் மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம்.அதற்குரிய நடவடிக்கைகளை வெளிப்படையாக முன்னெடுத்தோம்.
2015 முதல் 2019ஆம் ஆண்டு வரை ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் இடம்பெறும் வரை பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
2022 ஆம் ஆண்டு இடைக்கால அரசாங்கத்தில் நீதியமைச்சராக பதவியேற்ற பின்னர், நெரின்புள்ளே, நளின் இந்திரதிஸ்ஸ தலைமையில் குழு ஒன்றை நியமித்து பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
அதற்கமைய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படட பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றம் சென்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக பிறிதொரு சட்டத்தை உருவாக்க கூடாது என்று கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
நாங்கள் முன்வைத்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளும் சிவில் அமைப்பினரும் ஏற்றுக்கொண்ட போதும், தேசிய மக்கள் சக்தியும்,இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த சட்டவரைவு தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவில் ஆராயப்பட்ட போது தேசிய மக்கள் சக்தியினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களும் எதிராகவே வாக்களித்தார்கள்.
அனுரகுமார திசாநாயக்க தனது தேர்தல் அறிக்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக ரத்துச் செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.
நாங்கள் தயாரித்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் உள்ளடக்கத்துக்கு அப்பாற்பட்ட வகையில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இது சட்டமானால் அரசியலமைப்பால் உரித்தாக்கப்பட்டுள்ள தனிமனித சுதந்திரம் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும்.
இந்த சட்டவரைவை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
